சினிமா செய்திகள்
ஜெயலலிதாவை வாழ்த்திய இந்தி நடிகர்

ஜெயலலிதா நடித்த நூறாவது படம் ‘திருமாங்கல்யம்’. இந்தப் படத்தின் வெற்றி விழா, சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது.
விழாவிற்கு அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார். அந்த மேடையில் கலைஞரோடு, நடிகர் திலகம் சிவாஜிகணேசன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் ஏ.எல்.சீனிவாசன், கவிஞர் கண்ணதாசன், ‘திருமாங்கல்யம்’ படத்தின் தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு ஆகியோருடன் பிரபல இந்தி நடிகர் அசோக்குமாரும் மேடையை அலங்கரித் திருந்தார். முதல்- அமைச்சராக இருந்த டாக்டர் கலைஞரிடமிருந்து பரிசுக் கேடயத்தை அதிக மகிழ்ச்சியுடன், வாங்கினார் ெஜயலலிதா.

என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவருக்கு புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம். எப்பொழுது பார்த்தாலும் கையில் கேமராவுடன் சுற்றிக் கொண்டிருப்பார். அவருக்கு தெரிந்த ஒரு நண்பரின் மூலம் ‘திருமாங்கல்யம்’ படத்தின் வெற்றி விழாவிற்கான அழைப்பிதழ் இரண்டு கிடைத்திருக்கிறது. அதில் ஒன்றை என்னிடம் கொடுத்து, விழாவிற்கு வருமாறு அழைத்தார். அப்பொழுது நான் திருவல்லிக்கேணியில் உள்ள கெல்லட் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். திரைப்படத்தின் மேல் உள்ள ஆவலால் அவருடன் சென்றேன். சென்னை பல் கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் நிரம்பி வழிந்தது. அழைப்பிதழ்கள் வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்தி நடிகர் அசோக்குமாருடன், நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி வந் திருந்தார். விருந்தினர்கள் அனைவரையும், ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அசோக்குமார் மேடையில் ஆங்கிலத்தில் பேசினார். ‘ஜெயலலிதா என்னுடைய விசிறி ஆவார். நான் நடித்த படங்களை பார்த்து விட்டு, என் நடிப்பையும், படத்தையும் பாராட்டி கடிதம் எழுதுவார். அதேபோலத் தான் அவரது நூறாவது பட வெற்றி விழாவிற்கும் கடிதம் எழுதி அழைத்திருந்தார். அதனால்தான் இங்கு வந்தேன்’ என்று கூறியவர், ஒரு தங்கப் பேனாவை ஜெயலலிதாவுக்கு பரிசாக அளித்தார். பின்னர் ஜெயலலிதாவிடம், ‘உங்களுடைய ஆயிரமாவது படத்தின் வெற்றி விழாவிற்கு, இதே பேனாவில் என்னை வரச் சொல்லி கடிதம் எழுத வேண்டும். நான் கண்டிப்பாக வந்து கலந்துகொள்வேன்’ என்றார். அதைக் கேட்டு ஜெயலலிதா மகிழ்ச்சியில் திளைத்தார்.

தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசினார். ‘ஜெய லலிதாவின் நடன அரங்கேற்றத்திற்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை வகித்தேன். அன்றே தெரியும், இவர் மிகப்பெரிய அளவில் வருவார் என்று. அன்று இருந்தது போலவே, இன்னும் தங்கச் சிலையாகவே இருக்கிறார். அசோக்குமார் பரிசளித்த தங்கப் பேனாவில், அவரது ஆயிரமாவது பட விழாவில் கலந்து கொள்ள வரச் சொல்லி எனக்கும் கடிதம் எழுதினால், நானும் கண்டிப்பாக கலந்து கொள்வேன்’ என்றார்.

விழா முடிந்து அனைவரும் கலைந்து போகத் தொடங்கினர்.

இந்தி நடிகர் அசோக்குமாரின் தீவிர ரசிகனான நான், அவருடன் புகைப்படம் எடுக்க விரும்பினேன். என்னுடன் வந்தவர் அந்த நேரம் பார்த்து எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அசோக்குமாரை, கே.பாலாஜி ‘சீக்கிரம் வாருங்கள்’ என்று அவரது கையை பிடித்து அழைத்துச் சென்றார். யாரை வைத்து, எப்படி அசோக்குமாருடன் போட்டோ எடுப்பது என்று எனக்கு விளங்கவில்லை.

அந்த சமயம் விழாவிற்கு வந்திருந்த நடிகர் விஜயகுமாரை பார்த்தேன். அவரை எனக்கு 1972-ம் ஆண்டில் இருந்து நன்கு தெரியும். அதுமட்டும் அல்லாமல் நானும், விஜயகுமாரும் பக்கத்து ஊர்க்காரர்கள். அந்த உரிமையிலும், பழக்கத்திலும் ‘நடிகர் அசோக்குமாருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும்’ என்கிற விருப்பத்தைச் சொல்லி, ‘அதற்கு உதவி செய்யுங்கள்’ என்றேன்.

உடனே அவர் அன்றைக்கு அந்த நிகழ்ச்சியில் படம் பிடித்துக் கொண்டிருந்த தலைமை புகைப்பட கலைஞரை அழைத்து, என்னை அசோக்குமாருடன் போட்டோ எடுக்கச் சொன்னார். உடனே நான் நடிகர் அசோக்குமார் அருகே ஓடிச்சென்று, ‘நான் ஒரு பள்ளி ஆசிரியர். உங்களுடைய பெரிய ரசிகன். நீங்கள் நடித்த ‘மெகல்’, ‘கிஸ்மத்’ போன்ற படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். ஹாலிவுட் நடிகர் கிளார்க் கேபிளிடம் உள்ள காந்த கவர்ச்சியைப் போன்று உங்களிடமும் உள்ளது’ என்று ஆங்கிலத்தில் கூறினேன்.

அதைக்கேட்ட அவர் வாய்விட்டு சிரித்தார். நடிகர் பாலாஜியிடம், ‘என்னுடைய குறிக்கீட்டிற்கு என்னை மன்னியுங்கள் சார்’ என்று தமிழில் கேட்டுக்கொண்டேன்.

நாங்கள் எடுத்த போட்டோவுக்கு பின்புறம் ஜெயலலிதாவின் தலைப்பகுதி மட்டும் தெரியும். ஜெயலலிதாவுடனும் போட்டோ எடுக்க விரும்பினேன். அதற்குள் பாலாஜி, அசோக்குமாரை அழைத்து சென்று விட்டார். அவர் சென்றவுடன் போட்ேடாகிராபரும் போய்விட்டார்.

நடிகர் பாலாஜிக்கு இந்தி நடிகர் அசோக்குமாருடன் நெருங்கிய நட்பு உண்டு. அன்று அவரை அவருடைய விருந்தாளியாக அழைத்துச் சென்றார் என்ற உண்மையை பின்னாட்களில் நான் நடிகனாகி, பாலாஜியுடன் நட்பு ஏற்பட்ட பின் கேட்டு தெரிந்து கொண்டேன். நடிகர் பாலாஜியின் முதல் தயாரிப்பான ‘அண்ணாவின் ஆசை’ என்கிற படத்தில் நடிகர் அசோக்குமார் முக்கிய பாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜெயலலிதாவை சுற்றி, பெரும்புள்ளிகள் நிறையப் பேர் நின்று, அவரை வாழ்த்திக் கொண்டிருந்தனர். எனவே என்னால் அவர் அருகில் சென்று ஆட்டோகிராபில் கையெழுத்து கூட வாங்க முடியவில்லை. போட்டோ எடுத்தவரின் முகவரியை மட்டும் வாங்கிக்கொண்டு, நான்கு நாட்களுக்கு பிறகு அசோக்குமாருடன் எடுத்த போட்டோவை வாங்கி பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அந்த ஸ்டூடியோ ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு வலதுபுறம் இருந்தது. பின்நாட்களில் அவர் தான் சுபாஷ் சுந்தரம் போட்டோகிராபர் என்பதும், அவருடைய உதவியாளர் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற போட்டோ கிராபர் ரவி என்பதும் தெரியவந்தது.

width="375" />போட்டோகிராபர் சுபாஷ் சுந்தரம் மீது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று குற்றம்சாட்டப்பட்டு வழக்கும் நடந்தது என்பது பலர் அறிந்த விஷயம். பெரும் புள்ளிகளையும், பெரிய விழாக்களையும் புகைப்படம் எடுக்க அந்த காலங்களில் சுபாஷ் சுந்தரத்தைத் தான் எல்லோரும் அணுகுவார்கள். எனது வீட்டில் அலங்கரிக்கும் பல பெரிய தலைவர்களின் புகைப்படங்களை சுபாஷ் சுந்தரத்திடம் இருந்து தான் நான் வாங்கினேன்.

ஜெயலலிதாவுடன் போட்டோவும் எடுக்க முடியவில்லை, ஆட்டோகிராப்பும் வாங்க முடியவில்லை என்ற என்னுடைய மனக்குறையை போக்கும் விதமாக, மண்டபத்திற்குள் இருந்த ஜெயலலிதாவின் மிகப்பெரிய ேபாஸ்டர் முன்பு நின்று, என்னை அழைத்து வந்த உறவினர் மூலம் போட்டோ எடுத்துக் கொண்டேன்.

பின் நாட்களில் நானும் நடிகனாகி, முதல்-அமைச்சரான ஜெய லலிதா அம்மாவுடன் பழகி, ஒருநாள் 45 நிமிடங்கள் வரை பல விஷயங்களை மனம்விட்டுப் பேசியது போன்ற நிகழ்வுகளை இன்று நினைத்தால்கூட மனம் நிறைகிறது. கால ஓட்டத்தில் அவைகள் எல்லாம் கனவா, நிஜமா, கற்பனையா என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

-தொடரும்.

அபரிமிதமான நினைவாற்றல்

ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் ‘அல்சேஷன் நாய் குட்டிகள் இருக்கின்றன. விருப்பப்பட்டவர்கள் வந்து வாங்கிக் கொள்ளலாம்’ என்ற விளம் பரம் வந்திருந்தது. அந்த விளம்பரத்தின் கீழ் ‘நம்பர் 9, வேதா நிலையம், போயஸ் கார்டன்’ என்ற முகவரி இருந்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்த கவிதாலயா கிருஷ்ணன், நாய்குட்டி வாங்கும் எண்ணத்தில் அந்த வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு சென்ற பிறகுதான், அது நடிகை ஜெயலலிதாவின் வீடு என்பது அவருக்குத் தெரிந் திருக்கிறது.

அந்த வீட்டில் வேலைபார்க்கும் பெரியவர் ஒருவர் கிருஷ்ணனிடம், ‘என்ன வேண்டும்?’ என்றிருக்கிறார்.

‘நாய்க்குட்டி விளம்பரத்தைப் பார்த்து வந்தேன். குட்டி களைப் பார்க்கலாமா?’ என்று கிருஷ்ணன் கேட்க, அந்த பெரியவர் குட்டிகளைக் காண்பித்திருக்கிறார்.

குட்டி ஒன்றின் விலை 750 ரூபாய் என்று பெரியவர் சொல்லியிருக்கிறார். கவிதாலயா கிருஷ்ணன் முன்னேற்பாடாக பணம் எடுத்துச் செல்லாததால், ‘மாலையில் வந்து வாங்கிக்கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு, தான் விருப்பப்பட்ட இரண்டு குட்டிகளைத் தேர்வு செய்து, அடையாளத்திற்காக அவற்றின் கழுத்தில் தன்னுடைய கைக்குட்டையை இரண்டாகக் கிழித்துக் கட்டி விட்டு சென்றிருக்கிறார்.

மாலையில் வந்த போது, அந்த இரண்டு குட்டிகளும் அங்கு இல்லை. அதுபற்றி பெரியவரிடம் கேட்க, ‘ஒருவர் வந்து இரண்டு குட்டிகளையும் வாங்கிச் சென்றுவிட்டார்’ என்று கூறியிருக் கிறார்.

கவிதாலயா கிருஷ்ணன், வேறு இரண்டு குட்டிகளைத் தேர்வு செய்து விட்டு, 1500 ரூபாயைக் கொடுத்திருக்கிறார்.

இவை அனைத்தையும் வீட்டின் பால் கனியில் இருந்து ஜெயலலிதா பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். அதை கவிதாலயா கிருஷ்ணன் கவனித்து விட்டார். உடனே ஜெயலலிதா, ‘குட்டிகள் வளர்ப்பதற்கு உங்கள் வீட்டில் வசதி இருக்கிறதா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ‘இருக்கிறது அம்மா’ என்று கிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

பின்னர், ‘இரண்டு குட்டிகளும் உங்களுக்குத் தானா? இல்லை வேறு யாருக்குமா?’ என்று கேட்க, ‘ஒன்று எனக்கு. இன்னொன்று ஒரு வி.ஐ.பி.க்கு’ என்று கவிதாலயா கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.

மேலும் பல கேள்விகளைக் கேட்ட ஜெயலலிதா, அதன் மூலம் கிருஷ்ணன் குட்டிகளை விற்பனை செய்வதற்காக வாங்கவில்லை, சொந்தமாக வளர்க்கத் தான் வாங்குகிறார் என்பதை உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறார்.

பிறகு ‘இந்தக் குட்டிகளுக்கு நீங்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம்’ என்று சொல்ல, கவிதாலயா கிருஷ்ணன், ‘இல்லையம்மா.. ஒரு குட்டிக்கு 750 ரூபாய் என, இரண்டு குட்டிகளுக்கும் 1500 ரூபாய் கொடுத்து விட்டேன்’ என்றிருக்கிறார்.

உடனே பக்கத்தில் நின்ற பெரியவரை கோபத்தோடு பார்த்தவர், ‘பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்’ என்றிருக்கிறார்.

தொடர்ந்து குட்டிகளை எப்படி எடுத்துச் செல்வீர்கள்?’ என்று கிருஷ்ணனிடம் கேட்க, அவர் ‘கார் கொண்டு வந்திருக்கிறேன். அதில் வைத்து எடுத்துச் சென்று விடுவேன்’ என்றிருக்கிறார்.

‘இல்லை.. அது சரிவராது. சமயத்தில் குட்டிகள் ஓடிவிடும்’ என்று கூறிய ஜெயலலிதா, வீட்டிற்குள் சென்று பழக்கூடை ஒன்றை எடுத்து வந்துள்ளார். அதில் தலை துவட்டும் பெரிய துண்டை இரண்டாக மடித்துப் போட்டு, அதில் நாய்க்குட்டிகளை வைத்து, பெரிய மூடி போட்டு நன்றாக கட்டி கொடுத்திருக்கிறார். பின்னர் ‘குட்டிகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று அன்போடு ஜெயலலிதா கூறியதற்கு ‘சரியம்மா’ என்று சொல்லி விட்டு வீடு திரும்பியுள்ளார்.

கவிதாலயா கிருஷ்ணன், இரண்டு நாய்க்குட்டிகளில் ஒன்று, ஒரு வி.ஐ.பி.க்கு என்று சொன்னார் அல்லவா. அந்த வி.ஐ.பி. பின்னாளில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய மோகன்தாஸ் தான்.

வருடங்கள் பல ஓடிவிட்டன. சினிமாவில் இருந்து அரசியலில் கால் பதித் திருந்தார் ஜெயலலிதா. அதே நேரத்தில் கவிதாலயா கிருஷ்ணனும், பல படங்களில் நடித்து பிரபலமாகியிருந்தார். ஒரு முறை மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரத்திற்கு வந்திருந்தார் ஜெய லலிதா. அப்போது பார்வையாளர்களில் ஒருவராக நின்று கொண்டிருந்த கவிதாலயா கிருஷ்ணனைப் பார்த்து, ‘நன்றாக இருக்கிறீர்களா?’ என்று கேட்க, அன்று முதல் மயிலாப்பூர் பகுதியில் மிகவும் பிரபலமாகி விட்டார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெய லலிதா முதல்-அமைச்சரானார். அந்த நேரத்தில் கவிதாலயா கிருஷ்ணன் கலைமாமணி விருதுக்காக தகுதி பெற்றிருந்தார். ஜெயலலிதா தலைமையில் விருது வழங்கும் விழா நடந்தது. அவரிடம் கிருஷ்ணன் விருது வாங்கும் போது, ‘நான் பல வருடங்களுக்கு முன்பு உங்களிடம் நாய்க் குட்டிகள் வாங்கியிருக்கிறேன்’ என்று சொல்லியிருக் கிறார்.

அதற்கு ஜெயலலிதா, ‘தெரியுமே. இரண்டு அல்சேஷன் குட்டிகள் தானே. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது’ என்றிருக்கிறார்.

கவிதாலயா கிருஷ்ணனுக்கு விருதை பெறும் மகிழ்ச்சியைவிட, நாய்க்குட்டிகள் வாங்கியதை மறக்காமல் சொன்னது தான் அதிக மகிழ்ச்சியைக் கொடுத்ததாம்.

தலைவன் ஆவதற்கு முதல் தகுதியே, பிறர் வியக்கின்ற அளவிற்கு இருக்கும் அபரிமிதமான நினைவாற்றல் தானே.