சினிமா செய்திகள்
விக்ரம் ஜோடியாக அக்‌ஷரா ஹாசன்

விக்ரம் ஜோடியாக கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார்.
கமல்ஹாசன், விஸ்வரூபம்–2 படத்துக்கு பிறகு இந்தியன்–2 படத்தில் நடிக்க தயாராகிறார். இந்த நிலையில் தனது ராஜ்கமல் பிலிம் இண்டர்நே‌ஷனல் பட நிறுவனம் சார்பில் புதிய படத்தை தயாரிக்கப்போவதாக அறிவித்து உள்ளார். இதில் கதாநாயகனாக விக்ரமும், கதாநாயகியாக கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசனும் நடிக்கின்றனர். 

அக்‌ஷரா ஹாசன் ஏற்கனவே அமிதாப்பச்சன், தனுஷ் நடித்து தமிழ், இந்தியில் வெளியான ‘‌ஷமிதாப்’ படத்திலும், அஜித்குமாருடன் விவேகம் படத்திலும் நடித்துள்ளார். லாலி கி ஷாதி மெயின் லட்டு தீவானா என்ற இந்தி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். கமல்ஹாசன் இயக்கி நடித்து தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘சபாஷ் நாயுடு’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். 

இந்த நிலையில் தந்தை தயாரிக்கும் படத்தில் விக்ரமுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார். இந்த படத்தை ராஜேஷ் செல்வா டைரக்டு செய்கிறார். இவர் கமல்ஹாசன், திரிஷா நடித்த தூங்காவனம் படத்தை இயக்கியவர். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இது ஒரு பிரெஞ்சு படத்தின் ரீமேக் என்று தகவல். 

நள தமயந்தி, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மகளிர் மட்டும் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடக்க விழா நிகழ்ச்சியில் கமல்ஹாசன் நேரில் பங்கேற்று படக்குழுவினரை வாழ்த்தினார்.