பாலியல் தொல்லை நடந்தால் “பெண்கள் துணிச்சலுடன் புகார் கொடுக்க வேண்டும்” நடிகை அமலாபால் பேச்சு

பாலியல் தொல்லை நடந்தால் பெண்கள் துணிச்சலுடன் புகார் கொடுக்க வேண்டும் என்று நடிகை அமலாபால் கூறினார்.

Update: 2018-10-13 23:30 GMT
சென்னை, 

விஷ்ணு விஷால்- அமலாபால் ஜோடியாக நடித்த படம் ‘ராட்சசன்’. இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்துகொண்டு அமலாபால் பேசியதாவது:-

எனக்கும் பாலியல் கொடுமை நடந்துள்ளது. சொன்னப்போனால் பாலியல் தொல்லை பற்றி முதன் முதலாக புகார் கொடுத்தது நான் தான். கடந்த பிப்ரவரி மாதம் அந்த கொடுமை எனக்கு நடந்தது.

அதுபற்றி துணிச்சலாக நான் புகார் கொடுத்தேன். அந்த சமயத்தில் எனக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை. ‘மீ டூ’ அமைப்பு தேவை தான். பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் பெண்கள் துணிச்சலுடன் புகார் கொடுக்க வேண்டும். ‘மீ டூ’ அமைப்புக்கு பெண்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அமலாபால் பேசினார்.

நட்சத்திர ஆசை

அவர் மேலும் கூறியதாவது:-

திரையுலகில் நான் நட்சத்திரமாக பிரகாசிக்க ஆசைப்பட்டேன். இப்போது அந்த ஆசை எனக்குள் இல்லை. நல்ல நடிகையாக இருந்தால் போதும் என்று கருதுகிறேன். அதற்காகவே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.

சில நேரங்களில், சினிமாவை விட்டு போய்விடலாம் என்று எனக்கு தோன்றும். அப்போது எல்லாம் நல்ல கதை அம்சத்துடன் கூடிய பட வாய்ப்புகள் வந்து என் முடிவை மாற்ற வைத்துவிடும்.

அதுபோன்ற நல்ல தரமான கதை அம்சம் கொண்ட படம் ‘ராட்சசன்’.

மேற்கண்டவாறு அமலாபால் கூறினார்.

விழாவில், ரைடக்டர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

மேலும் செய்திகள்