டைரக்டர் சுசிகணேசன் மீது பெண் இயக்குனர் புகார்

டைரக்டர் சுசிகணேசன் மீது பெண் இயக்குனர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-15 22:00 GMT

குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை டைரக்டர் சுசிகணேசன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். சுசிகணேசன் திருட்டுப்பயலே, கந்தசாமி ஆகிய படங்களை டைரக்டு செய்தவர்.

லீனா மணிமேகலை முகநூல் பக்கத்தில் 2017-ல் வெளியிட்ட பாலியல் தொல்லையை இப்போது ‘மீ டூ’ ஹேஷ்டேக்கில் பதிவிட்டு டைரக்டர் சுசிகணேசன் பெயரையும் குறிப்பிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“நான் 2005-ல் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் வேலை செய்தபோது பிரபலமான ஒரு இளம் இயக்குனரை நேர்காணல் செய்தேன். நிகழ்ச்சியை முடித்து ஆட்டோ பிடிப்பதற்காக ஸ்டுடியோவில் இருந்து தெருமுனைக்கு நடந்து சென்றேன். அப்போது நான் நேர்காணல் செய்த இயக்குனர் கார் எனது அருகில் வந்து நின்றது.

வடபழனியில்தானே வீடு. நான் இறக்கி விடுகிறேன் என்று கூறிய டைரக்டரை நம்பி அவரது காரில் ஏறினேன். சில நிமிடங்கள் உரையாடல் நன்றாக சென்றது. அதன்பிறகு திடீரென்று அவரது குரல் மாறியது. என்னிடம் இருந்த மொபைல் போனை பிடுங்கி ‘ஆப்’ செய்து காருக்குள் எங்கோ எறிந்தார்.

தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவேண்டும் என்று மிரட்டினார். நான் அதிர்ச்சியானேன். சிறிது நேரம் செயல் இழந்து போனேன். அதன்பிறகு சுதாரித்துக் கொண்டு என்னை இறக்கி விடுமாறு கேட்டேன். கெஞ்சினேன். காரை உடைத்து விடுவேன் என்றேன். அலறினேன். 20 நிமிடத்தில் விடவேண்டிய இடத்துக்கு 45 நிமிடங்களாக கார் சுற்றிக்கொண்டு இருந்தது.

என் பையில் ஒரு சிறிய கத்தி வைத்திருந்தேன். அதை எடுத்து மிரட்டினேன். அதன்பிறகு என்னை இறக்கி விட்டார். அன்று நடந்ததை எனக்கு நெருக்கமானவர்களிடம் கூட என்னால் சொல்ல தைரியம் இல்லை. அதை நினைத்தால் இப்போதும் எனக்கு நடுக்கமாக உள்ளது.”

இவ்வாறு லீனா மணிமேகலை கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்