விஜய் படங்களும், கோர்ட்டு வழக்குகளும்..!

விஜய் படங்கள் என்றாலே கோர்ட்டு, வழக்கு என்பது சாதாரணமாகி விட்டது.

Update: 2018-10-27 23:00 GMT
விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது, அவர் நடித்த ‘சர்கார்.’ இந்த படத்தில் அவர் 2 வேடங்களில் நடித்து இருப்பதாக பேசப்படுகிறது. அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். இன்னொரு நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். ராதாரவி, யோகி பாபு, பழ.கருப்பையா, லிவிங்ஸ்டன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்திருக்கிறார். தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ‘சர்கார்’ படத்தின் கதை என்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். “சர்கார் படத்தை தடை செய்ய வேண்டும்” என்று அவர் தனது மனுவில் கூறியிருக்கிறார்.

‘கள்ள ஓட்டு’ என்ற ஒரே ஒரு வார்த்தைதான் ‘சர்கார்’ படத்தின் கதைக்கரு. அதனால், படத்தில் அரசியலும், அது தொடர்பான ‘பஞ்ச்’ வசனங்களும் நிறையவே இடம் பெற்றிருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

“விஜய் படங்கள் என்றாலே அரசியல் தலையீடுகளும், கோர்ட்டு வழக்குகளும் சர்வ சாதாரணமாகி விட்டது. அவருடைய சமீபகால படங்கள் அனைத்தும் வழக்குகளை சந்தித்து விட்டுத்தான் திரைக்கு வருகின்றன. ஏதோ ஒரு காரணத்தை கூறி, படத்தை முடக்கப்பார்க்கிறார்கள். அவர்களின் சதியை உடைத்து, ‘தளபதி’யின் படம் எப்படியும் வெளிவந்து விடும். ‘ரிலீஸ்’ ஆகுமோ, ஆகாதோ என்ற பயம் எங்களுக்கு இல்லை” என்கிறார்கள், விஜய் ரசிகர்கள்!

மேலும் செய்திகள்