நம்பிநாராயணனாக நடிப்பதால் பாராட்டுகள் : நடிகர் மாதவன் மகிழ்ச்சி

திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த இஸ்ரோ குழுவில் விஞ்ஞானியாக இருந்தவர் நம்பி நாராயணன்.

Update: 2018-11-17 23:55 GMT
திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த இஸ்ரோ குழுவில் விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ம் ஆண்டு கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி விசாரணை முடிவில் நம்பி நாராயணன் மீது தவறு இல்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

பொய் வழக்கில் சிக்க வைத்ததற்காக நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தற்போது நம்பிநாராயணன் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இதில் நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கிறார். மூன்று விதமான தோற்றங்களில் அவர் வருகிறார்.

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது அதில், “ராக்கெட் வாழ்க்கையில் 35 வருடமும், ஜெயிலில் 50 நாட்களும் வாழ்ந்து இருக்கிறேன். சிறையில் இருந்தபோது நாட்டுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு பற்றி பேசுவதுதான் இந்த படத்தின் கதை” என்று நம்பி நாராயணனாக நடிக்கும் மாதவன் பேசி இருந்தார். இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தில் நடிப்பது குறித்து மாதவன் கூறும்போது “சமீப காலமாக எனது செல்போனில் நிறைய தகவல்கள் வந்து குவிகின்றன. எல்லாமே என்னை பாராட்டி ரசிகர்களால் அனுப்பப்பட்டவை. இதற்கு காரணம் நம்பி நாராயணன் வாழ்க்கை கதையில் நடிப்பதுதான். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தில் எனக்கு ஜோடி இல்லை. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் இந்த படம் தயாராகிறது” என்றார்.

மேலும் செய்திகள்