சாரா அலிகானின் அம்மாவும்.. சித்தியும்..

இந்தி திரையுலகில் புதிய புயலாய் பிரவேசித்திருக்கிறார், சாரா அலிகான். மின்னல் வேகத்தில் முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

Update: 2018-12-09 11:09 GMT
கவர்ச்சி கட்டழகியான இவர், நடிகர் சைய்ப் அலிகானுக்கு முதல் மனைவி அம்ரிதா சிங் மூலம் பிறந்தவர். பின்பு சைய்ப் அலிகான், அம்ரிதாவை விவாகரத்து செய்து விட்டு கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். ‘அம்ரிதா சிங்கின் அன்பு மகள்’ என்று தன்னை கம்பீரமாக அறிமுகம் செய்து கொள்ளும் சாரா அலிகானின் பேட்டி:

நேரத்தைப் பொன்னாக மதிக்கும் நடிகை என்று உங்களை கூறுகிறார்களே?

எல்லோருக்குமே நேரம் பொன்னானதுதான். எனக்கு எப்போதுமே பரபரப்பாக இருப்பது பிடிக்கும். சிறந்த நடிகையாக உருவாக நான் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இப்போதே, திரையுலகம், ஊடகம் மற்றும் மக்களிடம் இருந்து என் மீது குவியும் கவனம், என்னை மூச்சுத் திணற வைப்பதாக உள்ளது.

நீங்கள் சிறுவயதில் இருந்தே நடிக்கும் ஆசையுடன்தான் வளர்ந்தீர்களாமே?

நான்கு வயதிலேயே நான் நடிக்க ஆசைப்பட்டேன். என்னைப் பள்ளியில் சேர்க்க எனது பெற்றோர் (சைய்ப் அலிகான்-அம்ரிதா) அழைத்துச் சென்றனர். அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும், கேட்கும் கேள்விகளுக்கு அமைதியாகப் பதிலளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறித்தான் கூட்டிச் சென்றனர். ஆனால் அங்கே முதல்வர் முன், அதிரடியாக சினிமா பாடலைப் பாட ஆரம்பித்தேன். அப்படிப்பட்ட சினிமா பைத்தியம் நான். அதனால் நான் ஒழுங்காக படிக்க மாட்டேன் என்று எனது பெற்றோர் நினைத்தது உண்டு. ஆனால் நான் கொலம்பியா பல்கலைக்கழகம் போய் படித்தேன். வரலாறு எனக்குப் பிடித்த பாடம். அருங்காட்சியகத்தில் 6 மணி நேரம் என்னை அடைத்துப் போட்டாலும் எனக்கு போரடிக்காது. சரித்திரத்தில் இடம் பிடித்தவைகளை எல்லாம் ரசித்துப் பார்ப்பேன்.

நடிகையாகும் ஆசை உங்களுக்குள் பளிச்சென வெளிப்பட்டது எப்போது?

நான் 96 கிலோ எடையை எட்டியபோது பல எச்சரிக்கைகளையும் மீறி தொடர்ந்து கிடுகிடுவென்று எனது எடை கூடிக்கொண்டு போனது. நான் அப்போதுதான் பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டை முடித்திருந்தேன். அப்போது ஒருநாள் இரவு, நான் நடிகையாக விரும்புகிறேன் என்று போனில் கூறினேன். உடனே எனது அம்மா, உனது தோற்றத்துக்கு நீ நடிகையாவது கடினம் என்று கூறினார். ஆனால் ஒன்றில் என் மனம் பதிந்து விட்டால் எப்பாடு பட்டாவது அதைச் சாதித்து விடுவேன். அதே மாதிரி, அதிரடியாக எனது எடையைக் குறைத்தேன், நடிகையாவதற்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன்.

உங்கள் பெற்றோர் இருவரும் திரைஉலகை சார்ந்தவர்கள். நீங்கள் நடிகையாக விரும்பியதும் ஒத்த கருத்துடன் அதை ஏற்றுக் கொண்டார்களா?

அவர்கள் எனது படிப்பு விஷயத்தில் ஒத்த கருத்துடன் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. நான் ஒரு பட்டம் பெற வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஒருவேளை நடிகையாக என்னால் வெற்றிபெற முடியாவிட்டால், படிப்பாவது கைகொடுக்கும் என்று அவர்கள் கருதியிருக்கலாம். படிப்புக்குத்தான் அவர்கள் முதலிடம் கொடுத்தார்கள். நானும் அவர்கள் ஆசைப்படி படிப்பை முடித்து, நடிகையாகும் விருப்பத்தைச் சொன்னபோது, ‘சரி... பார்க்கலாம்’ என்றார்கள்.

தற்போதாவது உங்கள் திரை உலக வாழ்க்கையில் அக்கறை கொண்டிருக்கிறார்களா?

நிச்சயமாக நான் பணத்துக்காக சாக்கடையில் குதிப்பது போன்று நடிக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் சினிமாவில் நான் விரும்புவதைத் தேர்வு செய்வதையும் தடுக்க மாட்டார்கள். நான் நடிக்கும் படம், அதில் வரும் காட்சியைப் பற்றி என் அம்மாவிடம் பேசுவேன். ஆனால் அவர் ஒருபோதும் எனது படப்பிடிப்புத் தளத்துக்கு வர மாட்டார். நான் ஒரு டாக்டராகியிருந்தால், அம்மா ஆபரேஷன் தியேட்டருக்கு என்னுடன் வந்தால் நன்றாயிருக்குமா? அதே நேரத்தில், நான் ஒரு அம்மா பொண்ணு. என்னை பற்றிய எல்லா ரகசியங்களையும் அம்மாவிடம் சொல்லி விடுவேன்.

உங்கள் குணம், உங்கள் பாட்டி ஷர்மிளா தாகூருடன் ஒத்துப்போகிறதாமே..?

இதை பலரும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உண்மையைச் சொல்வதென்றால், எனக்கு 9 வயதாக இருக்கும்போது எனது பெற்றோர் பிரிந்து விட்டனர். அதற்கப்புறம் பாட்டியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அரிதாகத்தான் கிடைத்தது. தந்தையிடம் எனது பாட்டியின் சாயல் அதிகம் தெரியும். என்னிடம் தந்தையின் சாயல் அதிகம் தெரியும். எனது பாட்டியின் புத்திசாலித்தனம், எங்கேயும் அவர் கவுரவமாக நடந்து கொள்ளும் விதம் எல்லாம் என்னைக் கவர்ந்தவை. அவர் எப்போதும் நளினமாக, அமைதியாக இருப்பார். ஆனால் நானோ கடிவாளம் போட்டால்தான் அமைதியாக இருப்பேன்.

உங்களின் சித்தி கரீனா கபூர் உங்களைப் பற்றி, ‘அழகும் புத்திசாலித்தனமும் இணைந்த அபூர்வ ஜாதி’ என்று ஒருமுறை கூறினார். கரீனாவுடன் உங்கள் பந்தம் எப்படி இருக்கிறது?

எப்போதும் நமக்கு நெருக்கமானவர்கள் நம்மைப் பற்றி நல்லவிதமாகத்தான் சொல்வார்கள். கரீனாவுடன் எனது உறவு பற்றி எப்போதும் எனக்கு குழப்பமோ, தயக்கமோ ஏற்பட்டதில்லை. ஆனால் அவரை ஒருபோதும் ஒரு அம்மாவாகக் கருத முடியாது. எனக்கென்று சூப்பரான ஒரு அம்மா இருக்கிறார். இல்லாத ஒன்றை நாம் வலிந்து உருவாக்க முயலக்கூடாது. கரீனா ஒரு நல்ல, உண்மையான பெண்மணி. அவர் எனக்கு தோழியாக இருக்க முயற்சிக்கிறார். அதை ஏற்றுக் கொள்ள நானும் தயாராகவே இருக்கிறேன். தற்போது எனது தந்தை எங்களுடன் வசிக்கவில்லை. ஆனால் அவர் எப்போதும் எனக்காக இருப்பார், என்னை சந்தோஷமாக பார்த்துக்கொள்வார். அந்த வகையில், அப்பாவை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் யாரும் எனது அன்புக்குரியவர்களே.



உங்கள் புதிய சகோதரரைப் பற்றி?

தைமூரைப் பற்றியா?

தைமூரும், உங்கள் உடன் பிறந்த சகோதரர் இப்ராகிமும் எப்படி இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்?

இருவருமே அழகானவர்கள், சுட்டித்தனமானவர்கள். தைமூர் இன்னும் குழந்தைதான். அவன் வளர்ந்து என்னோடு விளையாடும் நாளை எதிர்பார்க்கிறேன். இப்ராகிமுக்கு 18 வயதாகிறது. அவனும் நானும் ரொம்பவும் நெருக்கம்.

இப்ராகிமுக்கும் நடிப்பு ஆர்வம் இருக்கிறதா?

அவன் மேடையில் நடித்திருக்கிறான். என்னைவிடச் சிறந்த நடிகன் அவன். ஒரு முழுமையான நடிகன் ஆவதற்கு அவனுக்கு 99 சதவீதம் தகுதியிருக்கிறது.

நீங்கள் தற்போது நடிகையாகி விட்டீர்கள். எதிர்காலத்தில் வேறு ஏதேனும் திட்டம் உண்டா?

ஒரு ரகசியத்தை சொல்கிறேன்.. நான் அரசியலில் இறங்க விரும்புகிறேன். 

மேலும் செய்திகள்