உத்தரகாண்டில் எதிர்ப்பு: ‘கேதார்நாத்’ படத்துக்கு தடை

உத்தரகாண்டில் கேதார்நாத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-12-09 22:45 GMT
சுஷாந்த் சிங் ராஜ்புத், சாரா அலிகான், நிதிஷ் பரத்வாஜ் ஆகியோர் நடித்து திரைக்கு வந்துள்ள இந்தி படம் கேதார்நாத். அபிஷேக் இயக்கி உள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவில் பகுதியில் 2013-ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.

இந்து-முஸ்லிம் காதல், முத்த காட்சிகள், காதல்தான் புனித பயணம் என்ற வாசகம் போன்றவை படத்தில் இடம்பெற்று உள்ளதாகவும் இந்து மதத்தையும் இந்துக்கள் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் கேதார்நாத்தையும் அவமதிக்கும் காட்சிகள் உள்ளதாகவும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.

படத்துக்கு தடைவிதிக்கும்படி இந்து சேனா அமைப்பின் தலைவர் பிரகாஷ் ராஜ்புத் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். இது விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என்றும் வழக்கு தொடர்ந்தவர் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் கேதார்நாத் படம் திரைக்கு வந்தது. ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. தியேட்டர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவியது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள டேராடூன், நைனிடால், அல்மோரா, ஹரித்துவார் உள்பட ஏழு மாவட்டங்களில் கேதார்நாத் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.


மேலும் செய்திகள்