விருதுகள் பெற்ற ‘பெருந்தச்சன்’ படத்தை இயக்கியவர் மலையாள டைரக்டர் அஜயன் மரணம்

பிரபல மலையாள இயக்குனர் தோபில் அஜயன். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

Update: 2018-12-14 22:30 GMT
தோபில் அஜயனின்  உடல்நிலை திடீரென்று  மோசமானது. டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.

தோபில் அஜயன் சென்னை அடையாறில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து திரைப்பட துறைக்கான டிப்ளமோ பட்டம் பெற்றவர். உதவி ஒளிப்பதிவாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். சில தமிழ் படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். பின்னர் பாஷி, பரதன், பத்மராஜன் உள்ளிட்ட சில டைரக்டர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இவர் டைரக்டு செய்த முதல் மலையாள படம் பெருந்தச்சன். இந்த படம் 1991–ல் வெளியாகி பரபரப்பாக ஓடியது. வித்தியாசமான கதை களத்தில் வந்து திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. பல விருதுகளையும் அள்ளியது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது கிடைத்தது.

கேரள அரசு விருது மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளையும் பெற்றது.   1992–ம் ஆண்டுக்கான கோல்டன் வியோபோர்டு விருதுக்கும் பெருந்தச்சன் படம் பரிந்துரை செய்யப்பட்டது. தொடர்ந்து பல படங்களை டைரக்டு செய்தார். மரணம் அடைந்த தோபில் அஜயனுக்கு சுஷாமா என்ற மனைவியும் பார்வதி, லட்சுமி என்ற மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்