சர்வதேச பட விழாவில் ‘பரியேறும் பெருமாள்’, ‘96’ படங்களுக்கு விருது

சர்வதேச பட விழாவில் பரியேறும் பெருமாள், 96 சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டன.

Update: 2018-12-21 23:30 GMT
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 8 நாட்கள் நடந்தது. ‘இந்தோ சினி அப்ரிசியேஷன்’ சார்பில் இந்த விழா நடத்தப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சர்வதேச பட விழாக்களில் விருதுகள் பெற்ற வெளிநாட்டு படங்களையும் திரையிட்டனர்.

இதில் தமிழ் படங்கள் வரிசையில் பரியேறும் பெருமாள், 96, அபியும் அனுவும், அண்ணனுக்கு ஜே, ஜீனியஸ், இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத்திரை, கடைக்குட்டி சிங்கம், மெர்குரி, ராட்சசன், வடசென்னை, வேலைக்காரன், மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.

இந்த படங்களுக்குள் போட்டி நடந்தது. இதில் பரியேறும் பெருமாள், 96 ஆகியவை சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டன. பரியேறும் பெருமாள் படத்தை டைரக்டர் பா.ரஞ்சித் தயாரித்து இருந்தார். மாரி செல்வராஜ் இயக்கினார். கதிர் கதாநாயகனாக நடித்தார். சாதிபாகுபாடு அவலங்கள் பற்றிய கதையம்சத்தில் வந்தது.

பா.ரஞ்சித்துக்கு ரூ.1 லட்சமும், மாரி செல்வராஜுக்கு ரூ.2 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டன. 96 படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து இருந்தனர். காதல் படமாக வந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் நந்த கோபாலுக்கும், இயக்குனர் பிரேம்குமாருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டன. வடசென்னை படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கு சிறப்பு பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்