இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’

தமிழ் பட உலகில் இந்த வருடம் ஜி.எஸ்.டி. வரி, டிக்கெட் கட்டணம் உயர்வு, திரையுலகினர் வேலை நிறுத்தம், தியேட்டர்கள் மூடல் என்று பல்வேறு பிரச்சினைகள் இருந்தன.

Update: 2018-12-28 23:45 GMT
சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் 171 படங்கள் அதையும் மீறி  வந்தன. இவற்றில் குறைவான படங்களே லாபம் பார்த்தன. மற்றவை போட்ட முதலீட்டை கூட திரும்பப் பெற முடியாமல் நஷ்டத்தை சந்தித்தன.

வசூல் நிலவரம் குறித்து பிரபல வினியோகஸ்தரும், தியேட்டர் அதிபருமான திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:–

‘‘இந்த வருடம் அதிக படங்கள் வந்தாலும் சில படங்கள் மட்டுமே லாபம் பார்த்தன. பெரிய படங்களில் விஜய் நடித்த ‘சர்கார்’ படம் தமிழக அளவில் வசூலில் முதல் இடத்தில் இருந்தது. ரஜினிகாந்தின் 2.0 சென்னையில் வசூலில் முதல் இடத்தை பிடித்தது. இந்த படத்தை 3டியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். சென்னை தியேட்டர்களில் மட்டுமே அந்த வசதி இருந்தது.

உலக அளவில் வசூலில் 2.0 முதல் இடத்தை பிடித்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியானதால் அதிக வசூல் ஈட்டியது. கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படம் வசூலில் 3–வது இடத்தை பிடித்தது. டிக்கெட் கட்டணம் குறைவாக இருந்த புறநகர் பகுதிகளில் இந்த படம் நன்றாக ஓடியது.

இரும்புத்திரை, 96, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களும் நல்ல வசூல் பார்த்தன. சிறிய பட்ஜெட்டில் வந்த படங்களில் ‘ராட்சசன்’ அதிக வசூல் ஈட்டியது. மேலும் சில சிறிய பட்ஜெட் படங்களும் லாபம் கண்டன.’’

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்