பிரபல இயக்குநர் மிரிணாள் சென் மரணம் ; மம்தா பானர்ஜி இரங்கல்

இந்திய சினிமாவின் மூத்த இயக்குநரான மிரிணாள் சென் (95) உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு மேற்கு வங்காள முதல்வர் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-12-31 08:55 GMT
கொல்கத்தா,

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மிரிணாள் சென் (95) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை அவரது உடல்நிலை மோசமாகி கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.

மிரிணாள் சென் 1955-ல் ‘ராத் போர்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ‘மிருகயா’ படம் அவரை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியது. மலைவாழ் மக்களை முதலாளிகள் எப்படி சுரண்டுகிறார்கள் என்பதை தத்ரூபமாக இந்த படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார். "மிருகயா" படத்தில்தான் மிதுன் சக்கரவர்த்தி அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிரிணாள் சென் பெங்காலி, இந்தி, ஒடிசா மொழிகளில் 30 படங்களை இயக்கி உள்ளார். ஒரு தெலுங்கு படத்தையும் இயக்கியிருக்கிறார்.

நீர் ஆகாஷெர் நீச்சே, பைஷே ஷ்ரவான், புவன் ஷோம், அகா லெர் சந்தானே ஆகிய படங்கள் புகழை பெற்று தந்தன. இவருடைய பல படங்கள் தேசிய விருதுகளையும் பெற்றன. பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளன.

மிரிணாள் சென் திரையுலக சாதனைகளை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன், தாதா சாகேப் பால்கே விருதுகளை வழங்கியது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மிரிணாள் சென் மரணத்திற்கு  மேற்கு  வங்காள முதல்வர்  மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

மிரிணாள் சென் மறைவு திரைப்பட துறைக்கு பெரும் இழப்பு. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்