சிறந்த நடிகர்–நடிகை விஜய்சேதுபதி–திரிஷாவுக்கு விருது

சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி சிறந்த நடிகராகவும், திரிஷா சிறந்த நடிகையாகவும் தேர்வாகி உள்ளனர்.

Update: 2019-01-09 23:15 GMT
நார்வேயில் கடந்த 9 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படம் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 20 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டுக்கான விருது பட்டியல் வெளியாகி உள்ளது. 

சிறந்த படமாக பா.ரஞ்சித் தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்த ‘பரியேறும் பெருமாள்’ படம் தேர்வாகி உள்ளது. 96 படத்தில் ஜோடியாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த நடிகராகவும், திரிஷா சிறந்த நடிகையாகவும் தேர்வாகி உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை படத்தை இயக்கிய லெனின் சிறந்த டைரக்டராக தேர்வாகி உள்ளார். 

சிவகார்த்திகேயனுக்கு கனா படத்தை தயாரித்தமைக்காக சிறந்த தயாரிப்பாளருக்கான விருது வழங்கப்படுகிறது. சிறந்த இசையமைப்பாளராக பரியேறும் பெருமாள், வடசென்னை படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தேர்வாகி உள்ளார். சிறந்த பாடகி விருது சின்மயிக்கும், சிறந்த பாடகர் விருது அந்தோணி தாசனுக்கும் வழங்கப்படுகிறது. 

கலைச்சிகரம் விருதை நடிகர் விவேக் பெறுகிறார். விருது வழங்கும் விழா ஏப்ரல் 27–ந் தேதி நார்வே தலைநகரான ஓசுலோவில் நடக்கிறது.

மேலும் செய்திகள்