விதியை மீறி ரூ.8 கோடி செலவு நடிகர் விஷால் மீது போலீசில் புகார்

பட தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ராதாகிருஷ்ணன், ஏ.எல்.அழகப்பன், நடிகர் எஸ்.வி.சேகர் உள்பட 15 பேர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றனர்.

Update: 2019-01-24 21:30 GMT
பட தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ராதாகிருஷ்ணன், ஏ.எல்.அழகப்பன், நடிகர் எஸ்.வி.சேகர் உள்பட 15 பேர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு போலீஸ் கமிஷனரை சந்தித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீது புகார் மனு அளித்தனர்.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

“இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்போவதாக விஷால் அறிவித்து உள்ளார். இந்த விழாவை நடத்தக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. சங்கத்தில் வைப்பு நிதியாக ரூ.7.50 கோடி இருந்தது. அந்த பணத்தை விதிமுறைக்கு மாறாக விஷால் செலவு செய்து இருக்கிறார்.

இதுகுறித்து கணக்கு கேட்டோம். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. சங்க பணத்தில் ரூ.8.45 கோடி எடுத்து செலவு செய்துவிட்டோம் என்றும், அந்த பணத்தை திருப்பி வைத்து விடுவோம் என்றும் விஷால் தெரிவித்து இருக்கிறார். இந்த பணத்தில் ரூ.3.50 கோடியை அவரது நண்பர் ரமணாவுக்கு மேடை அலங்காரம் செய்ய கொடுத்து இருக்கிறார்.

மீதி ரூ.3.50 கோடியை இளையராஜாவுக்கு கொடுத்து இருக்கிறார். சங்க பணத்தை பொதுக்குழு ஒப்புதல் இல்லாமல் இவர்களுக்கு கொடுத்தது கிரிமினல் குற்றமாகும். எனவே விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் புகார் அளித்து இருக்கிறோம். இதற்கான ஆவணங்களையும் ஒப்படைப்போம்.”

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்