இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பினை ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றம்

இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பினை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Update: 2019-01-30 08:35 GMT
சென்னை 

தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டவும், இசையமைப்பாளர் இளையராஜாவின் திரையுலக சாதனைகளை பாராட்டவும் ‘இளையராஜா 75’ என்ற பெயரில் கலைவிழா நடத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்தது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சங்கம் செய்துள்ளது.

இந்த இசைநிகழ்ச்சி மூலம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.10 கோடி நிதி திரட்டவும் அதை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்குவது உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் வருவதால் இளையராஜா நிகழ்ச்சியை ஏன் ஒத்தி வைக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.  ஆனால், நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டதால் நிகழ்ச்சியை நிறுத்த முடியாது என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது.

இந்நிலையில், இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்காக இளையராஜாவுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தயாரிப்பாளர் சங்கம் அதில் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்