எதிர்ப்பை மீறி திரைக்கு வருகிறது : நரேந்திர மோடி படம் டிரெய்லர் வெளியானது

பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

Update: 2019-03-22 23:30 GMT
ஓமங்க் குமார் இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது.

அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி மோடி படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு ஆதரவு அலையை உருவாக்கும் என்று கருதி காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. படத்துக்கு தடைவிதிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கும் மனு அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். மோடி தனது தாயிடம் சன்னியாசம் போவதாக கூறுவது, பின்னர் இமயமலை சென்று அங்குள்ள சாமியார்களுடன் சில வருடங்கள் தங்கிவிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேருவது போன்ற காட்சிகள் டிரெய்லரில் உள்ளன.

குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது அக்‌ஷர்தம் கோவிலில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்தியாவில் இருந்த நெருக்கடி நிலை ஆகியவையும் டிரெய்லரில் உள்ளன. இறுதியில் மோடியாக நடித்துள்ள விவேக் ஓபராய் பாகிஸ்தானை எச்சரிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் மோடியின் தாயாக ஸரினா வாஹாப்பும், மனைவி கதாபாத்திரத்தில் பர்கடா பிஸ்ட்டும் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்