நடிகரான ராம்கோபால் வர்மா

பிரபல இந்தி இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் தெலுங்கு, கன்னட படங்களையும் இயக்கி உள்ளார்.

Update: 2019-04-11 23:45 GMT
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை கன்னடத்தில் ‘கில்லிங் வீரப்பன்’ என்ற பெயரில் படமாக்கி வில்லாதி வில்லன் என்ற பெயரில் தமிழிலும் வெளியிட்டார்.  சூர்யா, விவேக் ஓபராய், பிரியாமணி ஆகியோரை வைத்து தெலுங்கு, இந்தியில் இயக்கிய ரத்த சரித்திரம் படமும் தமிழில் வெளியானது.

நடிகர்-நடிகைகள் பற்றியும், சமூக விஷயங்கள் குறித்தும் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வந்தார். ஜெயலலிதா, சசிகலா நட்பை மையமாக வைத்து புதிய படமொன்றை இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவித்தார். என்.டி.ராமராவ் வாழ்க்கையை லட்சுமி என்.டி.ஆர் என்ற பெயரிலும் படமாக எடுத்தார்.

தற்போது ‘கோப்ரா’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தை அகஸ்த்யா மஞ்சு என்பவருடன் இணைந்து இயக்கவும் செய்கிறார். இந்தியாவில் வாழ்ந்த ஆபத்தான குற்றவாளியின் கதை என்று படத்தை விளம்பரப்படுத்தி உள்ளனர். ஒரு உண்மை குற்றவாளியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்கின்றனர்.

“எனது தொழில் வாழ்க்கையில் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகிறேன்” என்று டுவிட்டரில் ராம்கோபால் வர்மா பதிவிட்டு இருந்தார். அவருக்கு அமிதாப்பச்சன் “நடிப்பு என்ற உண்மையான தொழிலை கண்டுபிடித்து விட்டார்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்