“நடிகைகளுக்கு சம்பளம் குறைவு” - ராதிகா ஆப்தே வருத்தம்

நடிகைகளுக்கு சம்பளம் குறைவாக கிடைப்பதாக நடிகை ராதிகா ஆப்தே வருத்தம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-17 22:38 GMT

தமிழில் கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். சர்ச்சை கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் கூறியதாவது:-

“சினிமாவில் இப்போது மாற்றங்கள் தெரிகிறது. நல்ல கதைகளுடன் படங்கள் வருகின்றன. ரசிகர்களும் ஒரே மாதிரி படங்களாக இருப்பதை விட வித்தியாசமாக எதிர்பார்க்கிறார்கள். டிஜிட்டல் யுகத்தில் எல்லாம் மாறிவிட்டது. உலகம் முழுவதும் தயாராகும் அனைத்து படங்களையுமே ரசிகர்கள் பார்க்கிறார்கள். வித்தியாசமான கதைகளை எதிர்பார்ப்பதற்கு அதுவும் காரணம்.

நான் நடித்த எல்லா படங்களிலுமே எனக்கு முக்கியத்துவம் இருந்தன. நடிகர்கள்-நடிகைகளுக்கு இடையே சம்பள வித்தியாசம் அதிகம் உள்ளது. வெற்றியடைந்த படங்களின் பெருமை கதாநாயகனைத்தான் போய் சேருகிறது. எவ்வளவு சம்பளம் என்று முடிவு செய்வது நடிகைகள் கையில் இல்லை.

சம்பள விகிதத்தை தீர்மானிக்க நிறைய காரணங்கள் இருக்கிறது. ஆனால் கதாநாயகன் அளவுக்கு கதாநாயகிகளுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்பது மட்டும் நிஜம். நட்சத்திர அந்தஸ்துள்ள படங்களுக்கு ஓப்பனிங் பெரிய அளவில் இருக்கும். ஆனால் கதை வித்தியாசமாக இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய நடிகர்கள் படமாக இருந்தாலும் தோல்வி அடைந்து விடும்.

சிறிய நடிகர் நடிகைகள் படங்களை கூட, ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்கிறார்கள். எனவே படத்தில் நடிகர்களை விட கதைதான் முக்கியம்.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

மேலும் செய்திகள்