கார்த்தி, சிம்புவின் ஆயிரத்தில் ஒருவன், தொட்டி ஜெயா 2-ம் பாகங்கள்

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

Update: 2019-05-05 23:57 GMT
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ரஜினிகாந்தின் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது. அஜித்குமாரின் பில்லா படங்களும் 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படத்தை 3 பாகங்களாக எடுத்து வெளியிட்டனர்.

காஞ்சனா படத்தின் இரண்டு பாகங்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வசூல் பார்த்தன. இப்போது அதன் மூன்றாம் பாகமும் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியிலும் காஞ்சனா படம் ரீமேக் ஆகிறது. விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலையில்லா பட்டதாரி படங்களும் இரண்டு பாகங்கள் வந்தன.

அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சிம்பு நடித்த தொட்டிஜெயா ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. டைரக்டர் செல்வராகவன் கூறும்போது, “ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் இயக்க ஆவலாக உள்ளது. இதற்கான முயற்சியில் நான் ஈடுபடுவேன். ஆனாலும் அது நடக்க வேண்டும். சூர்யா, கார்த்தி நடித்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

இதுபோல் தொட்டி ஜெயா படத்தை இயக்கிய துரை அதன் இரண்டாம் பாகத்துக்கான கதையை தயார் செய்துவிட்டதாகவும் சிம்புவும் இதில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது நடித்து வரும் மாநாடு படத்தை முடித்து விட்டு இந்த படத்தில் சிம்பு நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்