2 முறை தடை செய்யப்பட்ட ‘மெரினா புரட்சி’ படத்தை வெளியிட அனுமதி

நவின்குமார், சுருதி உள்பட பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவினர் 2 முறை தடை விதித்தனர்.

Update: 2019-05-06 22:00 GMT
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த இளைஞர்கள் போராட்டத்தை மையப்படுத்தி மெரினா புரட்சி என்ற பெயரில் புதிய படத்தை எம்.எஸ்.ராஜ் டைரக்டு செய்துள்ளார். நவின்குமார், சுருதி உள்பட பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவினர் 2 முறை தடை விதித்தனர்.

இதை எதிர்த்து படக்குழுவினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். படத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து தணிக்கை குழு 7 நாட்களில் முடிவு செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து மறு ஆய்வு கமிட்டியினர் ஐதராபாத்தில் மெரினா புரட்சி படத்தை பார்த்து திரையிட அனுமதி வழங்கி உள்ளனர். இந்த மாதம் இறுதியில் மெரினா புரட்சி படம் திரைக்கு வருகிறது.

இதுகுறித்து படத்தின் டைரக்டர் எம்.எஸ்.ராஜ் கூறியதாவது:-
“மெரினா கடற்கரையில் 2017-ம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 8 நாட்கள் நடந்த போராட்டத்தின் பின்னால் உள்ள உண்மைகளையும், அரசியலையும் அப்படியே மெரினா புரட்சி படத்தில் காட்சிப்படுத்தினேன். இந்த படத்துக்கு எதிராக பீட்டா அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது. இதனால் தணிக்கை குழு 2 தடவை படத்துக்கு தடைவிதித்தது.

அதன்பிறகு கோர்ட்டுக்கு சென்று இப்போது அனுமதி பெற்று இருக்கிறோம். தணிக்கை குழுவால் படம் வெளியாவதில் 9 மாதங்கள் தாமதம் ஏற்பட்டு பண நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டது. இது தமிழர்களின் எழுச்சியை பற்றிய படம். இந்த மாத இறுதியில் 11 நாடுகளில் திரைக்கு வருகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்