‘களவாணி-2’ பட விவகாரம்: நடிகர் விமல் மீது ரூ.1½ கோடி மோசடி புகார்

‘களவாணி-2’ பட விவகாரத்தில் நடிகர் விமல் மீது ரூ.1½ கோடி மோசடி புகார் போலீசில் தயாரிப்பாளர் அளித்தார்.

Update: 2019-05-11 23:30 GMT
சென்னை,

நடிகர் விமல் நடித்த ‘களவாணி-2’ படத்தை இயக்குனர் சற்குணம் இயக்கி, தயாரித்துள்ளார். இந்தநிலையில் இப்படத்தை வெளியிட கூடாது என்று தயாரிப்பாளர் சிங்காரவேலன் மிரட்டல் விடுப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சற்குணம் கடந்த 9-ந்தேதி புகார் அளித்தார்.

அதன்பேரில் சிங்காரவேலனை நேற்று போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்திருந்தனர். அதன்படி அவர் சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று காலை ஆஜரானார். அப்போது அவர் நடிகர் விமல் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றையும் அளித்தார். இதுதொடர்பாக சிங்காரவேலன் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘களவாணி-2’ படத்தின் காப்புரிமையை கொடுப்பதாக கூறி நடிகர் விமல் தன்னிடம் ரூ.1.5 கோடி வாங்கி ஏமாற்றி உள்ளார். அதற்கான ரசீதுகள் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர், ‘கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென்று ‘களவாணி-2’ படத்தை சற்குணம் தயாரித்திருக்கிறார். எனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூற தொடங்கினார். அப்போது எங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டோம். அப்போது, ‘கவலை வேண்டாம். படத்தின் காப்புரிமையை எப்படியாவது வாங்கி தந்து விடுகிறேன் என்றார். இப்போது படத்தின் தயாரிப்பாளர் சற்குணம் இன்னொருவருக்கு படத்தின் காப்புரிமையை கொடுத்துவிட்டார் என்று நடிகர் விமல் கூறுகிறார். அவர் எங்களை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

இயக்குனர் சற்குணமும் நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜரானார்.

மேலும் செய்திகள்