நடிகையும் மாடலுமான அழகி மீரா மிதுன் மீது போலீசில் புகார்

ஏமாற்றி விட்டதாக நடிகையும் மாடலுமான அழகி மீரா மிதுன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-06-03 10:01 GMT
சென்னை,

ஆறு அழகி பட்டங்களை வென்றவரும்,  8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் படங்களில் நடித்த நடிகையுமான மீரா மிதுன் அண்மையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  புகார் அளித்திருந்தார்.

தனியாக தாம் அழகிப்போட்டி நடத்த உள்ளதாகவும், இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கேல் ஆகியோர் மிரட்டுவதாகவும் மீரா மிதுன் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் பறிக்கப்பட்டது. வயதை குறைத்துக்காட்டி, திருமணமானதை மறைத்து போட்டியில் பங்கேற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் ஜோ மைக்கேலும், மாடல் அழகி நிருபா என்பவரும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். நிருபா அளித்துள்ள புகாரில், அழகிப்போட்டி நடத்துவதாகக் கூறி, ஒவ்வொரு அழகிகளிடம் இருந்தும் 3 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூலித்து விட்டு மீரா மிதுன் ஏமாற்றி விட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ஜோ மைக்கேல் அளித்துள்ள புகாரில், மிஸ் தமிழ்நாடு என்ற தங்களது நிறுவனத்தின் லோகோவையே மீரா மிதுனும் பயன்படுத்தி களங்கத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மீரா மிதுன் மீது தொடரும் புகார்களால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் இதர பட்டங்களும் பறிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்