அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா

பிரபல இந்திய ஊட்டச்சத்து நிபுணர்களில் ஒருவராக இருப்பவர் திவ்யா. இவர் நடிகர் சத்யராஜின் மகள்.

Update: 2019-07-12 23:26 GMT
மருத்துவ துறைகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு திவ்யா எழுதிய கடிதம் பரபரப்பானது. திவ்யா அளித்த பேட்டி வருமாறு:-

“உணவே மருந்து என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அனைவரும் ஆரோக்கியம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் எல்லா மருத்துவர்களுக்கும் இருக்க வேண்டும். அதனை நோக்கியே செயல்பட வேண்டும். ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்ற வகையில் தமிழ்நாட்டில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளேன்.

அதன் அடிப்படையில் அரசு ஆஸ்பத்திரிகளில் என் ஆராய்ச்சியை தொடங்கினேன். அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து குறைபாடு உள்ளது. இதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபரேஷன் தியேட்டர்களும், காரிடார்களும் சுத்தமாக இல்லை.

மழைகால நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசியும் குறைவாகவே உள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளை வருவாய் உருவாக்கும் எந்திரங்களாகவே பார்க்கிறார்கள். மருந்து கடைகளில் காலாவதியான மருந்துகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்து விலையை குறைக்க வேண்டும்.

நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணராக இருப்பதால் என் கவனம் சுகாதார துறையின் மீது இருக்கிறது. சிறுவயதிலேயே அரசியல் செய்திகள் படிப்பதில் ஆர்வம் இருந்தது. ஆனால் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றால் நாம் அந்த அமைப்பில் இருந்தால்தான் சாத்தியம். இதற்காகவே விரைவில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது.”

இவ்வாறு திவ்யா கூறினார்.

மேலும் செய்திகள்