கதாநாயகன் ஆகிறார், தங்கர்பச்சான் மகன்

தங்கர் பச்சான் இயக்கும் புதிய படத்தில் அவரது மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

Update: 2019-07-19 23:15 GMT
பல்வேறு மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தங்கர்பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் போன்ற படங்களை இயக்கி உள்ளார். பார்த்திபன், சேரன், சத்யராஜ், பிரபுதேவா ஆகியோர் இவரது படங்களில் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.

சிறிது இடைவெளிக்கு பிறகு தங்கர் பச்சான் மீண்டும் புதிய படம் இயக்குகிறார். இந்த படத்தில் அவரது மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபுதேவாவிடம் 2 வருடங்கள் நடனம் கற்று விஜித் பச்சான் இதில் நடிக்கிறார். சண்டை பயிற்சியும் பெற்றுள்ளார். கதாநாயகிகளாக மிலனா, அஸ்வினி ஆகியோர் நடிக்கின்றனர். முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா, யோகிராம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இந்த படம் குறித்து தங்கர் பச்சான் கூறும்போது, “சென்னை நகரை மையமாக கொண்டு இந்த படம் தயாராகிறது. எனது வழக்கமான படங்களை விட முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் இன்றைய தலைமுறைக்கு பிடிக்கும் படமாக இருக்கும். காதல், அதிரடி சண்டைகள், நகைச்சுவை, பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் படத்தில் இடம்பெறும். முனிஷ்காந்த் நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் வருகிறார்” என்றார்.

இந்த படத்தை பி.எஸ்.என். என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. தரண்குமார் இசையமைக்கிறார். பிரபுதயாளன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பை முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி தொடங்கிவைத்தார்.

முழு படப்பிடிப்பும் சென்னையில் நடக்கிறது.

மேலும் செய்திகள்