மராட்டிய வெள்ள சேதம்: நடிகை ஜெனிலியா ரூ.25 லட்சம் உதவி

மராட்டிய மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் நகரமெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகள் ஆறுகளாக மாறி உள்ளன. பொதுமக்களின் உடமைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன.

Update: 2019-08-13 23:45 GMT
பெரும்பாலான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமார் 4 லட்சம் மக்கள் அரசு அமைத்துள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மராட்டிய மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள கொய்னா அணை 890 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் 100 டி.எம்.சி கொள்ளளவும் கொண்டது. அந்த அணை பாதிக்கும் மேல் நிரம்பி விட்டது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தாராளமான நிதி வழங்கும்படி மராட்டிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை ஏற்று நடிகை ஜெனிலியாவும் அவரது கணவர் ரிதேஷ் தேஷ்முக்கும் மாராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கினர். அவர்கள் காசோலை வழங்கும் புகைப்படத்தை முதல்-மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். 

அதில், “மராட்டிய மாநில வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கிய ஜெனிலியா தேஷ்முக்குக்கு நன்றி” என்று பதிவிட்டு உள்ளார். மேலும் பல நடிகர்-நடிகைகள் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்