மோகன்லால், சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்துக்கு தடை கேட்டு வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

நடிகர்கள் மோகன்லால், சூர்யா, ஆர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘காப்பான்’ படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Update: 2019-08-26 23:30 GMT
சென்னை,

நடிகர்கள் மோகன்லால், சூர்யா, ஆர்யா, நடிகை சாயிஷா உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘காப்பான்’. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ‘லைக்கா‘ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை வெளியிட தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில், குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கு மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பணியாற்றி வருகிறேன். பல கதைகளை எழுதியுள்ளேன். ‘சரவெடி‘ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி, கடந்த 2016-ம் ஆண்டு முறைப்படி காப்புரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தேன்.

அந்த கதையில், பத்திரிகை நிருபரான கதாநாயகன், இந்திய பிரதமரிடம் பேட்டி காணும்போது, விவசாயம், நதி நீர் இணைப்பு மற்றும் நதி நீர் பங்கீடு ஆகியவற்றின் நன்மை குறித்து எடுத்துரைப்பார்.

தடை விதியுங்கள்

இந்த கதையை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் விரிவாக சொன்னேன். கதையை கேட்ட அவர், எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது, எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். நானும் வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.

ஆனால், இயக்குனர் கே.வி.ஆனந்த், என்னுடைய ‘சரவெடி‘ கதையை, ‘காப்பான்‘ என்ற பெயரில் திரைப்படம் எடுத்துள்ளார். இந்த படத்தின் விளம்பரம் டி.வி. சேனல்களில் வெளியானது.

அதில், கதாநாயகன், பிரதமருடன் பேட்டி காண்பது போலவும், அப்போது விவசாயம், நதிநீர் பங்கீடு, நதிகள் இணைப்பு ஆகியவை குறித்து கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார். எனது கதையை என்னிடம் எந்த அனுமதியும் பெறாமல், வேறு ஒரு தலைப்பில் படம் எடுத்துள்ளார். எனவே, இந்த ‘காப்பான்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

தள்ளிவைப்பு

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.மணிவாசகம் ஆஜராகி, ‘காப்பான்’ திரைப்படம் இந்த வார இறுதியில் வெளியாக உள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று கூறினார்.

எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், “இந்த திரைப்படம் செப்டம்பர் 20-ந்தேதி தான் வெளியாக உள்ளது. அதனால், தடை எதுவும் விதிக்கவேண்டாம். இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்கிறோம்“ என்று வாதிட்டனர்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “இந்த வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 4-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதற்குள் எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்“ என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்