சூர்யாவின் சிங்கம்-3 வில்லன் நடிகர் கைது

சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக தயாரான ‘சிங்கம்-3’ படத்தில் வில்லனாக நடித்தவர் முகமது அகான்பி ஓஜரா என்ற ஜேசன்.

Update: 2019-10-25 22:00 GMT
சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக தயாரான ‘சிங்கம்-3’ படத்தில் வில்லனாக நடித்தவர் முகமது அகான்பி ஓஜரா என்ற ஜேசன். அமீர்கானின் தங்கல், மன்மோகன் சிங் வாழ்க்கை கதையான ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர், கேரி ஆன் கேசார், ராக் தேஷ் உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார்.

இவர் நைஜீரியாவை சேர்ந்தவர். கிங் ஆப் மை வில்லேஜ், சூப்பர் ஸ்டோரி உள்ளிட்ட சில நைஜீரிய படங்களிலும் நடித்து இருக்கிறார். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஜேசன் சுற்றிக்கொண்டு இருந்தார். அவர் மீது விமான நிலைய பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து ஜேசனை அழைத்து விசாரணை நடத்தினர். உடமைகளையும் ஆய்வு செய்தனர். விமானத்தில் கோவா செல்வதற்கான டிக்கெட்டை அவர் வைத்து இருந்தார். பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவரது விசா கடந்த 2011-ம் ஆண்டிலேயே முடிந்து இருந்தது.

விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து இந்தியாவிலேயே அவர் வசித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜேசனை தனி அறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் முரண்பட்ட பதிலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜேசனை கைது செய்தனர். அவரிடம் தற்போது உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்