கமல்ஹாசனுக்கு எதிராக பேசினேனா? நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம்

நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னையில் நடந்த தர்பார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

Update: 2019-12-09 00:19 GMT
நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னையில் நடந்த தர்பார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது சிறுவயதில் தீவிர ரஜினி ரசிகனாக இருந்ததாகவும் அப்போது கமல்ஹாசன் போஸ்டரில் சாணி அடித்ததாகவும் குறிப்பிட்டார். இந்த பேச்சுக்கு கமல்ஹாசன் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கு விளக்கம் அளித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தர்பார் பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் படத்தின் போஸ்டர் மீது சிறுவயதில் நான் சாணி அடித்து இருக்கிறேன் என்று பேசியதை சிலர் விமர்சித்துள்ளனர். நிகழ்ச்சியின் முழு வீடியோவை பார்த்தால் நான் என்ன பேசினேன் என்பது புரியும். சிறுவயதில் தீவிர ரஜினி ரசிகனாக இருந்து விவரம் தெரியாமல் கமலுக்கு எதிராக நடந்து இருக்கிறேன் என்பதையும் தற்போது ரஜினியும் கமலும் ஒன்றாக கைகோர்த்துள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பேசினேன்.

கமல்ஹாசன் மீது எனக்கு மரியாதை உள்ளது. நான் தவறாக பேசி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் முழு வீடியோவையும் பார்த்தால் நான் கமல்ஹாசனுக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்பது புரியும். எனது பேச்சை சிலர் திட்டமிட்டு திசை திருப்புகின்றனர். கமல்ஹாசனை எந்த அளவுக்கு மதிக்கிறேன் என்பது எனக்கு தெரியும். அதை மற்றவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.” இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்