கர்நாடக இசை கலைஞர் வாழ்க்கை கதையில் மோகன்லால்

கர்நாடக இசை கலைஞர் வாழ்க்கை கதையில் மோகன்லால் நடிக்க உள்ளார்.

Update: 2019-12-24 22:48 GMT
அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் வாழ்க்கை கதைகளை படங்களாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, நடிகர்கள் என்.டி.ராமராவ், சஞ்சய்தத், நடிகை சாவித்திரி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்ட பலரது வாழ்க்கை சினிமா படமாக வெளிவந்தது.

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையும் படமாகிறது. இந்த வரிசையில் பிரபல கர்நாடக இசை வித்வான் செம்பை வைத்தியநாத பாகவதரின் வாழ்க்கை கதையும் சினிமா படமாக தயாராகிறது. இதில் செம்பை வைத்தியநாத பாகவதர் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார்.

இந்த படத்தை இசையமைப்பாளரும் இயக்குனருமான விஜித் நம்பியார் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே முந்திரி மோன்சன் என்ற படத்தை இயக்கி உள்ளார். செம்பை வைத்தியநாத பாகவதர் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள செம்பை என்ற கிராமத்தில் பிறந்தார். மூன்று வயதிலேயே இசை பயின்று 70 வருடங்கள் இசை துறையில் சாதனைகள் நிகழ்த்தினார். பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.

இவரது சீடர்தான் பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. வைத்திய நாத பாகவதர் பெயரில் இசை விழாக்கள் நடந்து வருகின்றன. இவர் 1974-ல் மரணம் அடைந்தார்.

மேலும் செய்திகள்