மீண்டும் நடிக்க வந்துள்ள விஜயசாந்தி சம்பளம் ரூ.4 கோடி?

பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகமான விஜயசாந்தி 1980-களில் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

Update: 2020-02-17 00:41 GMT
வைஜயந்தி ஐ.பி.எஸ். படத்தில் அவரது அதிரடி சண்டை காட்சிகள் வரவேற்பை பெற்றன. தேசிய விருதும் கிடைத்தது. 2006-ல் சினிமாவை விட்டு விலகி ஆந்திர அரசியலில் ஈடுபட்டார்.

12 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சரிலேரு நீக்கவேறு என்ற தெலுங்கு படத்தில் மகேஷ் பாபுவின் அம்மாவாக நடித்துள்ளார். இந்த படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நடிக்க விஜயசாந்தி ரூ.5 கோடி சம்பளம் கேட்டதாகவும் இறுதியில் ரூ.4 கோடிக்கு பேசி முடித்ததாகவும் இணைய தளங்களில் தற்போது தகவல் பரவி வருகிறது.

முன்னாள் கதாநாயகிக்கு இவ்வளவு தொகையா? என்று சமூக வலைத்தளத்தில் பலர் வியந்து பேசி வருகிறார்கள். ஆனாலும் விஜயசாந்திக்கு ரூ.4 கோடி கொடுத்ததை தயாரிப்பாளர் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. டுவிட்டரில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஜயசாந்தி.

அவர் கூறும்போது, “என்னை மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்த மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் அனில் ஆகியோருக்கு நன்றி. தமிழில் கல்லுக்குள் ஈரம் படத்திலும் தெலுங்கில் கில்லாடி கிருஷ்ணுடு படத்திலும் அறிமுகமானேன். இன்றுவரை எனக்கு ஆதரவாக இருந்து வரும் ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்