கொரோனாவால் சீன படப்பிடிப்பு ரத்து கமலின் இந்தியன்-2 கதையில் மாற்றம்?

இத்தாலியில் கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-02-19 22:30 GMT
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கினர்.

பின்னர் ஐதராபாத், ராஜமுந்திரி சிறைச்சாலை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. போபாலில் 2 ஆயிரம் துணை நடிகர்களுடன் கமல்ஹாசன் 90 வயது முதியவராக வந்து வர்ம கலையால் வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சிகளை படமாக்கினர். கமல்ஹாசனுக்கு ஆஸ்பத்திரியில் காலில் சிறிய அறுவை சிகிச்சை நடந்ததால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது.

தற்போது கமல்ஹாசன் பூரண குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். அடுத்து சீனாவில் சில முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருந்தனர்.

இந்தியன் முதல் பாகத்தின் கிளைமாக்சில் விமான நிலையத்தில் நடக்கும் தீ விபத்தில் இருந்து வயதான சேனாதிபதி கமல்ஹாசன் தப்பித்து வெளிநாடு செல்வதுபோல் படத்தை முடித்து இருந்தனர். இந்தியன் 2-ம் பாகத்தில் ஊழல் எதிர்ப்பு களையெடுப்பை தொடங்குவதற்காக கமல்ஹாசன் சீனாவில் இருந்து இந்தியா திரும்புவதுபோன்று இயக்குனர் ஷங்கர் திரைக்கதை அமைத்து இருந்தார்.

ஆனால் கொரோனா வைரஸ் பலிகள் காரணமாக சீன படப்பிடிப்பை ரத்து செய்து கதையில் சில மாற்றம் செய்து இருப்பதாகவும், சீனாவுக்கு பதில் இத்தாலியில் படப்பிடிப்பை நடத்த இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்