60 வயது முதியவராக வித்தியாசம் காட்டும் திலீப்

மலையாள சினிமாவில் மம்முட்டி, மோகன்லாலுக்கு அடுத்த படியாக மிக முக்கியமான நாயகனாக ரசிகர்களால் பார்க்கப்படுபவர், திலீப். இவர் திரைத்துறையில் கால்பதித்து 30 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

Update: 2020-02-21 10:48 GMT
திலீப் நடிப்பில் வெளியான பாதிக்கும் மேற்பட்ட படங்கள் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே உருவாக்கப்பட்டிருக்கும். 2016-ம் ஆண்டு திலீப் நடிப்பில் வெளியாகி, மிகப்பெரிய தோல்வியைக் கண்ட படம் ‘வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்.’ 

இந்தப் படத்தில் நடித்ததாலோ என்னவோ.. அடுத்த வருடம் அவர் நிஜமாகவே சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது. நடிகை கடத்தல் வழக்கில் சிறைக்கு சென்றிருந்த சமயத்தில் தான் அவர் நடித்த ‘ராமலீலா’ திரைப்படம் வெளியானது.

நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதன் காரணமாக, அவர் மேல் ரசிகர்களுக்கு மதிப்பு குறைந்திருக்கும். அதனால் அவரது சினிமா வாழ்க்கை இனிமேல் அஸ்தமனம்தான் என்று அனைத்து தரப்பினருமே கருதியிருந்த நேரத்தில், அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, ‘ராமலீலா’ திரைப்படம்.

ஒன்றிரண்டு மாதங்களில் சிறையில் இருந்து வெளியே வந்தவர், அந்த மன உளைச்சலிலேயே சிக்கித் தவிக்காமல், தன்னை வளர்த்த சினிமாத் துறையிலேயே மீண்டும் கவனம் செலுத்தி, மன உளைச்சலில் இருந்து விடுபட முயற்சித்தார். சிறைக்கு சென்று வந்த பிறகு அவர் நடிப்பில் இதுவரை 6 திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் 4 படங்கள் அதிரி புதிரி வெற்றியைப் பெற்றுள்ளன என்பதை வைத்தே, அவர் மீதான ரசிகர்களின் பார்வை, எந்த வகையிலும் மாறவில்லை என்பதை உணர முடியும்.

2018-ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியாகி இருந்த ‘கம்மார சம்பவம்’ என்ற திரைப்படம், திலீப்பின் நடிப்பை வேறு ஒரு தளத்தில் கொண்டு போய் நிறுத்தியது. வித்தியாசமான திரைக்களம், மாறுபட்ட இருவேறு கதாபாத்திர நடிப்பு என்று திலீப் வரிந்து கட்டியிருந்த இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் திலீப்புக்கு நிகரான கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருந்தார்.

‘ராமலீலா’, ‘கம்மார சம்பவம்’ என்று தொடர்ச்சியாக இரண்டு இறுக்கமான கதாபாத்திர படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தபிறகு, மீண்டும் திலீப் கையில் எடுத்தது அவரது பேவரைட்டான நகைச்சுவையை. 2019-ம் ஆண்டில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட ‘கோடதி சமாக்‌ஷம் பாலன் வக்கீல்’ திரைப்படம் வெளியாகி வெற்றியைப் பெற்றது.

அதே வருடத்தில் வெளியான ‘சுபராத்திரி’, ‘ஜேக் அண்ட் டேனியல்’ திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதில் ‘ஜேக் அண்ட் டேனியல்’ படத்தில் அர்ஜூனுடன் நடித்திருந்தார், திலீப். இந்தப் படத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பழைய கதையை தூசு தட்டி கையில் எடுத்திருந்ததால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இந்த நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் ‘மை சாண்டா’ என்ற திரைப்படம் வெளியானது. இதனை குழந்தைகளுக்கான ஒரு படமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த படத்தில் வரும் அனைத்து காட்சிகளிலும் திலீப், சாண்டா கிளாஸ் தோற்றத்திலேயே இருப்பார். தனது வழக்கமான சேட்டை, நகைச்சுவை எதுவும் இன்றி, ஒரு சாண்டா கிளாஸாகவே வாழ்ந்திருந்தார், திலீப். இந்தப் படம் குழந்தைகள் மத்தியிலும், வெகுஜன ரசிகர்களின் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் திலீப் நடித்து வரும் ‘கேசு ஈ வீடின்ட நாதன்’ திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், இந்தப் படத்தில் திலீப் 60 வயது முதியவர் தோற்றத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஊர்வசி இணைந்துள்ளார். திலீப்பும், ஊர்வசியும் இரண்டு டீன்ஏஜ் பிள்ளைகளின் பெற்றோராக இந்தப் படம் முழுவதும் வருவதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு இதுவரை மூன்று விதமான போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதிலும் கடந்த காதலர் தினத்தை ஒட்டி வெளியிடப்பட்ட போஸ்டர், ரசிகர்களிடையே பல லைக்குகளை அள்ளியிருக்கிறது. திலீப்பும், ஊர்வசியும் வயதான தோற்றத்தில், மணக் கோலத்தில் இருப்பது போன்ற அந்த போஸ்டர், ரசிகர்களிடையேயும், சினிமா வட்டாரத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்திற்காக திலீப் மொட்டை அடித்தும் நடித்திருக்கிறாராம்.

இந்தப் படத்தை திலீப்பின் நண்பரான நாதிர்ஷா இயக்குகிறார். இவர் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பலகுரல் நகைச்சுவை, பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் 2015-ம் ஆண்டு முதன் முதலாக இயக்கிய ‘அமர் அக்பர் அந்தோணி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக 2016-ம் ஆண்டு இயக்கிய ‘கட்டப்பனையிலே ரித்விக்ரோஷன்’ திரைப்படம் வெளியாக பிளாக் பஸ்டர் அடித்தது. 2019-ம் ஆண்டு ‘மேரா நாம் ஷாஜி’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை என்றாலும், மிகப்பெரிய தோல்வியையும் சந்திக்கவில்லை.

இதையடுத்து நாதர்ஷா இயக்கத்தில் 4-வதாக உருவாகும் படம்தான் ‘கேசு ஈ வீடின்ட நாதன்.’ இரண்டு மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனரின் படைப்பு, மலையாள திரையுலகில் முக்கியமானவராக வலம் வரும் திலீப் நடித்திருக்கும் படம், அதுவும் 60 வயது முதியவராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் இருப்பதைப் போலவே, அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

அதே நேரம் படம் எந்த அளவுக்கு அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என்பதை படம் வெளியான பிறகுதான் அறிய முடியும்.

மேலும் செய்திகள்