கொரோனா பணியாளர்களுக்காக 8 ஓட்டல்களை வழங்கிய இயக்குனர்

கொரோனா பணியாளர்களுக்காக இயக்குனர் ரோஹித் ஷெட்டி 8 ஓட்டல்களை வழங்கி உள்ளார்.

Update: 2020-04-23 05:27 GMT
சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு-பகலாக உழைக்கும் மருத்துவர்கள், நர்சுகள், போலீசார், சுகாதார பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோருக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் நன்றி சொல்லி பாராட்டி வருகிறார்கள். அவர்களுக்கு உதவவும் பலர் முன் வந்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனு சூட், மும்பையில் உள்ள தனது 6 மாடி ஓட்டலை மருத்துவர்கள், நர்சுகள் தங்கிக்கொள்ள இலவசமாக வழங்குவதாக அறிவித்து இருந்தார். இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் உள்ள தனது 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார்.

இந்த நிலையில் பிரபல இந்தி சினிமா இயக்குனர் ரோஹித் ஷெட்டி மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள 8 ஓட்டல்களை கொரோனா பணியாளர்கள் தங்கி கொள்ள வழங்கி உள்ளார். இவர் சென்னை எக்ஸ்பிரஸ், சிம்பா, தில்வாலே, கோல்மால் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் ஷெட்டி உதவியை பாராட்டிய மும்பை காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனா போராளிகள் ஓய்வெடுக்கவும், குளிக்கவும், உடை மாற்றிக்கொள்ளவும் மும்பையில் உள்ள 8 ஓட்டல்களை வழங்கி, இரண்டு வேளை சாப்பாட்டுக்கும் ரோஹித் ஷெட்டி ஏற்பாடு செய்துள்ளார். மும்பையை பாதுகாக்கும் பணியில் எங்களுடன் இணைந்துள்ள ரோஹித் ஷெட்டிக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்