பிரபல மலையாள குணசித்திர நடிகர் மரணம் - பினராயி விஜயன் இரங்கல்

பிரபல மலையாள குணசித்திர நடிகர் ரவி வல்லத்தோல் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார்.

Update: 2020-04-25 11:43 GMT
திருவனந்தபுரம்,

பிரபல மலையாள நடிகர் ரவி வல்லத்தோல். லெனின் ராஜேந்திரன் இயக்கத்தில் 1987-ல் வெளியான சுவாதி திருநாள் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அடுத்து காட்பாதர், சர்கம், நாலு பெண்கள், இடுக்கி கோல்ட், சதுரங்கம், ஹிட்லர் பிரதர்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பான சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட  நாடகங்களில் நடித்துள்ளார். அமெரிக்கன் ட்ரீம்ஸ் என்ற சீரியலில் சிறப்பாக நடித்ததற்காக, சிறந்த சின்னத்திரை நடிகருக்கான கேரள அரசின் விருதைப் பெற்றுள்ளார்.

இவர் மனைவி கீதா லட்சுமி. இருவரும் இணைந்து சிறப்பு குழந்தைகளுக்காக தனல் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த சில வருடங்களாக நாடகங்களில் நடிக்காமல் திருவனந்தபுரத்தில் உள்ள வலுத்தாகாட் பகுதியில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் திடீரென அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 67. கேரளாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகள், மலையாள சின்னத்துரை நடிகர்கள் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு ஏராளமான மலையாள திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவிற்கு  கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

தான் நடிக்கும் கதாபாத்திரங்களை மிகவும் சரியாக செய்கிற திறமையான கலைஞர் என தெரிவித்துள்ளார்.

மறைந்த ரவி வல்லத்தோல், சிறந்த எழுத்தாளரும் கூட. சுமார் 25 கதைகள் எழுதியுள்ளார். அதில் இரண்டு டி.வி சீரியல்களாக எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்