இர்பான்கான் மறைவிற்கு அமிதாப்பச்சன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல்

இர்பான்கான் மறைவிற்கு அமிதாப்பச்சன் உள்ளிட்ட திரை பிரபலங்கள்.ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-04-29 08:09 GMT
மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் (வயது 53) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.

இர்பான்கான் 2018-ல் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். லண்டனில் இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு குடல் தொற்று ஏற்பட்டது. இதற்காக இர்பான் கான், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் மரணமடைந்தார்.

இர்பான் கான் 1988 முதல் இந்திப் படங்களில் நடித்து வந்தார்.  2017-ல் இவர் நடித்து வெளியான 'இந்தி மீடியம்' படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது. 2011-ல் 'பான் சிங் தோமர்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

இந்நிலையில், நடிகர் அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இர்பான்கான் மறைவு என்ற செய்தி அறிந்தவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.  நம்ப முடியவில்லை. ஒரு சக சிறந்த நடிகர், சினிமா உலகிற்கு ஒரு சிறந்த பங்களிப்பாளர்.  எங்களை மிக விரைவில் விட்டு சென்றுவிட்டார். மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கி விட்டார். அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் மற்றும் துவாஸ் என அதில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அமிதாபச்சனை தொடர்ந்து  இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கெயிஃப், கிரிக்கெட் வீரர் ஹேமாங் பதானி நடிகை பிரியங்கா சோப்ரா, அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி, அஜய் தேவ்கன், ஷபனா ஆஸ்மி, ஆர்.மாதவன், சோனம் கபூர், ஷூஜித் சிர்கார், மினி மாத்தூர், நீலேஷ் மிஸ்ரா,பூமி பெட்னேகர், பரினிதி சோப்ரா, சஞ்சய் சூரி உள்ளிட்ட பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இர்பான் கான் மறைவுக்கு சினிமா ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இர்பான் கானுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக #IrrfanKhan என்ற ஹாஷ்டாக் டுவிட்டரில் டிரெண்டாகி இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்