‘தலைவி’ பெயரில் தயாராகும் ஜெயலலிதா வாழ்க்கை கதையில் இன்னொரு நடிகை

‘தலைவி’ பெயரில் தயாராகும் ஜெயலலிதா வாழ்க்கை கதையில் இன்னொரு நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்.

Update: 2020-05-16 05:00 GMT
சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். விஜய் டைரக்டு செய்கிறார். படப் பிடிப்பை விரைவாக முடித்து அடுத்த மாதம் 26-ந்தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனா ஊரங்கினால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி தோற்றங்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை பாக்யஸ்ரீயும் ‘தலைவி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்து உள்ளார். இவர் இந்தியில் சல்மான்கானுடன் ‘மைனே பியார் கியா’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘தலைவி’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து பாக்யஸ்ரீ கூறும்போது, “தலைவி படத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் என்னால்தான் திருப்பம் ஏற்படுவது போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கங்கனா ரணாவத்துக்கும், எனக்கும் அதிகமான காட்சிகள் உள்ளன. படத்தில் எனது தோற்றம் வித்தியாசமாக இருக்கும்” என்றார்.

இவர் சசிகலா கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

மேலும் செய்திகள்