கொரோனாவால் சினிமா சந்திக்கும் சவால்கள் - நடிகர் சிரஞ்சீவி பேட்டி

கொரோனாவால் சினிமா சந்திக்கும் சவால்கள் குறித்து நடிகர் சிரஞ்சீவி பேட்டி அளித்துள்ளார்.

Update: 2020-05-22 06:21 GMT
நடிகர் சிரஞ்சீவி, ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திரைப்படங்களின் டூயட் பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வந்தன. பல படங்களின் வசன காட்சிகளை முடித்து விட்டு வெளிநாடுகளில் பாடல் காட்சிகளை படமாக்க காத்து இருக்கின்றனர். கொரோனாவால் அது நடக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே நமது நாட்டிலேயே வெளிநாடுகளின் அரங்குகளை அமைத்து படப்பிடிப்பை நடத்தலாம். இதுதான் இப்போதுள்ள தீர்வு. முன்புபோல் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த செல்ல முடியாது. இந்தியாவுக்குள்ளேயே ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு சென்று படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்குமா? என்று தெரியவில்லை.

ஊட்டி அல்லது மூணாறு பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தலாம் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். சினிமா நிறைய சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தாலும் பிரச்சினை தீர்ந்து விடாது. கதாநாயகர்கள் ஒரு படத்தில்தான் நடிப்பார்கள். ஆனால் கதாநாயகிகள் பல படங்கள் வைத்து இருப்பார்கள். அதற்கு கால்ஷீட்டை அவர்கள் பிரித்து கொடுப்பதில் சிக்கல் வரும்.

தியேட்டர்கள் திறந்த பிறகு ரசிகர்கள் வருகிறார்களா? இல்லையா? என்பது பிறகு பார்க்க வேண்டியது. அதற்கு முன்பு படப்பிடிப்பை முடிப்பதே பெரிய பிரச்சினையாக உள்ளது என்று சிரஞ்சீவி கூறினார்.

மேலும் செய்திகள்