புதிய விதியால் படப்பிடிப்பில் பங்கேற்க இயக்குனர் மணிரத்னம், அமிதாப்பச்சனுக்கு சிக்கல்: இந்திய டைரக்டர்கள் சங்கம் எதிர்ப்பு

புதிய விதியால் படப்பிடிப்பில் பங்கேற்க இயக்குனர் மணிரத்னம், அமிதாப்பச்சனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய டைரக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Update: 2020-06-05 01:46 GMT

கொரோனா ஊரடங்கு தளர்வில் சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு மராட்டிய அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளி, குறைவானவர்களை படப்பிடிப்பில் பயன்படுத்துவது, தூய்மையை கடைப்பிடிப்பது என்றெல்லாம் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் 65 வயதான நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்புக்கு கண்டிப்பாக வரக்கூடாது என்றும் தடை விதித்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் யாருக்கேனும் உடல்நிலை பாதித்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு டாக்டரும் நர்சும் எப்போதும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. வயதான நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இல்லாமல் படப்பிடிப்பை நடத்துவது சாத்தியம் இல்லை என்று இந்திய திரைப்பட தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தமைக்காக அரசுக்கு நன்றி. ஆனால் 65 வயதுள்ளவர்களை படப்பிடிப்புக்கு அனுமதிக்காமல் இருப்பது கஷ்டம். காரணம் அமிதாப்பச்சன், அனுபம்கேர் நசுருதீன் ஷா, ஷக்தி கபூர், பரேஷ் ராவல், மிதுன் சக்கரவர்த்தி, சுபாஷ்கை, மகேஷ்பட். சேகர் கபூர், மணிரத்னம், ஜாவேத் அக்தர், பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் மூத்த கலைஞர்கள். திரைப்பட துறையில் திறமையானவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது சரியல்ல. தினமும் படப்பிடிப்பில் டாக்டரையும் நர்சுவையும் வைத்து இருக்க வேண்டும் என்பதும் முடியாத காரியம். இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.”

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்