சாத்தான்குளம் சம்பவம் : பாடகி சுசித்ரா டுவிட்டரில் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வீடியோவை நீக்கும்படி சிபிசிஐடி போலீசார் தன்னை அச்சுறுத்தினார்கள் என்று பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-07-11 14:11 GMT
சென்னை,

சாத்தான்குளம் வியாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று தமிழகம் வந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இந்த வழக்கில் இதுவரை கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல்நிலையம், கோவில்பட்டி சிறைச்சாலை, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களை நேரில் சென்று பார்வையிட சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து இன்று காலை 11.30 மணியளவில் ஜெயராஜ்-பென்னிக்ஸின் வீட்டிற்கு சென்று அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு இரண்டாக பிரிந்து அதில் 4 பேர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

சாத்தான்குளத்தில் தாக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சாட்சி அளித்துள்ள ஜெயராஜ்-பென்னிக்ஸின் உறவினர்கள் 2 பேரை உடன் அழைத்துச் சென்றுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், மருத்துவமனையில் அன்று நடந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையில் 7 மணி நேரம் நடந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் படி,  ஜெயராஜ் வீடு மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிபிஐ ஆய்வு செய்தனர்.  பென்னிக்சின் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சம்பவத்தன்று நடந்த காட்சிகளை சொல்லவைத்து வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.  சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை சூடுபிடிக்கிறது.

இந்தநிலையில், பாடகி சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சாத்தான்குளம் தந்தை-மகன் தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்திருந்தனர். இதையடுத்து சுசித்ராவின் வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிசிஐடி அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கிடையே சுசித்ரா தனது வீடியோவை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார்.

ஆனாலும் இன்னும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் உலவிக்கொண்டிருக்கிறது. அந்த வீடியோவை அனைவரும் நீக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுசியின் வீடியோவில் இருக்கும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அது போலீசாருக்கு எதிராக தூண்டிவிடுவதைப் போல இருப்பதாகவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. எனவே அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அதை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீடியோ நீக்கப்பட்டது குறித்து சுசித்ரா தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சிபிசிஐடி போலீசார் அழைத்தார்கள். போலி செய்திகளை பரப்பியதற்காக கைது செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தினார்கள். எனது வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் நான் வீடியோவை நீக்கியிருக்கிறேன். மக்கள் இந்த வழக்கை கவனிக்க வேண்டும். ஏராளமான, மோசமான நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன" என அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்