ஊரடங்கு தளர்வுகளை எதிர்க்கும் நடிகை நிலா

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா மூழுவதும் மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-08-31 23:15 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா மூழுவதும் மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்வுகளையும் மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. இதன் மூலம் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் தளர்வுகள்படி இந்தியில் நடத்தப்பட்ட தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும் அதில் ஒருவர் பலியானதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊரடங்கு தளர்வுக்கு தமிழில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக அன்பே ஆருயிரே, பிரசாந்துடன் ஜாம்பவான், சிபிராஜின் லி, அர்ஜுன் ஜோடியாக மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை நிலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “எனது நண்பர் ஒருவர் கொரோனாவுக்கு தனது பெற்றோரை சில தினங்களுக்கு முன்பு பறிகொடுத்தார். முதலில் அவரது தாய் இறந்தார். பிறகு தந்தையை இழந்தார். அது எனக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. கொரோனா மனிதர்களை கொன்று வருகிறது. இந்த நிலையில் தளர்வுகள் மூலம் அனைத்தையும் திறந்து விட்டுள்ளனர். இது பாதுகாப்பானது இல்லை. எனவே மக்கள் தேவையானால் மட்டுமே வெளியே செல்லுங்கள். மற்றவர்களை சந்தியுங்கள். வெளியே போகும்போது தயவு செய்து முககவசம் அணியுங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்