நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப் ஜாமீனை ரத்து செய்ய மனு

நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் ஜாமீனை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-09-14 23:54 GMT
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்த பிரபல நடிகையை 2017-ல் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதாக மலையாள நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்து கொச்சி ஆலுவா சிறையில் அடைத்தனர். 85 நாட்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் விடுதலையானார். திலீப் தனது மனைவியும், நடிகையுமான மஞ்சுவாரியரை விவாகரத்து செய்து நடிகை காவ்யா மாதவனை 2-வது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை கடத்தல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது கொச்சியில் உள்ள சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 136 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். நடிகை ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், நடிகர் இடைவேளை பாபு, இயக்குனர் லால் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை உள்ளிட்டோர் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நிலையில் ஜாமீனில் வந்துள்ள திலீப் சாட்சிகளை கலைப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு சார்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்