ரூ.2 கோடி நஷ்டஈடு வழக்கு: மும்பை மாநகராட்சியை சாடிய கங்கனா ரணாவத்

நடிகை கங்கனா ரணாவத் வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

Update: 2021-03-04 06:11 GMT
நடிகை கங்கனா ரணாவத் வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்தி சினிமா விருந்துகளில் போதை பொருள் பயன்படுத்துகின்றனர் என்றார். மராட்டிய அரசையும் சாடினார். இதனால் மும்பையில் உள்ள கங்கனா ரணாவத் அலுவலகத்தை மாநகராட்சியினர் இடித்து தள்ளினர். இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த கங்கனா தனது கட்டிடத்தின் 40 சதவீத பகுதிகள் இடிக்கப்பட்டுவிட்டன. இதற்கு ரூ.2 கோடி நஷ்டஈடு வேண்டும் என்று கோரினார். இந்த வழக்கில் கங்கனாவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் மிரட்டல் காரணமாக தனது பங்களா சேதத்தை மதிப்பிட கட்டிட கலைஞர்கள் முன்வரவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மும்பை மாநகராட்சி எனது பங்களாவை இடித்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதற்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கில் வென்றுள்ளேன். ஒரு கட்டிட கலைஞர் மூலமாக இழப்பீடு தொகை புகாரை பதிவு செய்ய வேண்டும். ஆனால் எந்த கட்டிட கலைஞரும் அதற்கு சம்மதிக்கவில்லை. அவர்களுடைய உரிமத்தை ரத்து செய்வதாக மும்பை மாநகராட்சியிடம் இருந்து மிரட்டல்கள் வருவதாக கூறுகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்