படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் தமிழ் சினிமாவில் ரூ.1,000 கோடி முடக்கம்

தமிழ் சினிமா உலகில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதாலும், தியேட்டர்கள் மூடப்பட்டதாலும் ரூ.1,000 கோடி முடக்கப்பட்டுள்ளதாக மூத்த தயாரிப்பாளர்கள் கூறினார்கள்.

Update: 2021-05-22 20:13 GMT
கொரோனா பரவுவதை தடுக்க அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை அறிவித்து இருக்கிறது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. சினிமா தொடர்பான எந்த வேலைகளும் நடைபெறவில்லை. ரஜினிகாந்த் நடிப்பில் வளர்ந்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் படமாக்கி விட்டார்கள். இன்னும் 4 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால், மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்கிற நிலையில், ‘அண்ணாத்த’ படம் நிறுத்தப்பட்டுள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ 
படமும் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. விஜய் நடிக்கும் 65-வது படமும் பெரும்பகுதி வளர்ந்த நிலையில், நிறுத்தப்பட்டு இருக்கிறது.

அஜித்குமாரின் ‘வலிமை’ படமும் 3 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் முடிவடைந்து விடும் என்கிற நிலையில், ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தின் ‘டப்பிங்’ பணி முடிந்து விட்டது. அஜித்குமார், ‘டப்பிங்’ பேசி முடித்து விட்டார். விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் திரைக்கு வரும் நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முக்கிய நடிகர்களின் படங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழ் சினிமா உலகில் சுமார் ரூ.1,000 கோடி முடக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘ஊரடங்கு காலத்தில் திரைத்துறை சார்ந்த எந்த பணிகளையும் செய்வதில்லை என்று முடிவெடுத்துள்ளோம். கொரோனா பரவல் குறையும்போது, அரசு அறிவிக்கும் தளர்வுக்குப்பின், திரைப்பட பணிகள் தொடரும்’’ என்றார்.

மேலும் செய்திகள்