பின்னணி பாடகி சுசீலா வாழ்க்கை படமாகிறது

பின்னணி பாடகி சுசீலா வாழ்க்கை படமாகிறது.

Update: 2021-05-26 00:53 GMT
பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் என்.டி.ராமராவ். ராஜசேகர ரெட்டி, நடிகர் சஞ்சய்தத், நடிகைகள் சாவித்திரி, சில்க் சுமிதா, விளையாட்டு வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், தோனி உள்ளிட்ட பலரது வாழ்க்கை சினிமா படங்களாக வந்துள்ளன.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் படமாகி உள்ளது. இந்த நிலையில் அனைத்து இந்திய மொழிகளிலும் 50 ஆயிரத்துக்கு மேல் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை நிகழ்த்திய பிரபல சினிமா பின்னணி பாடகி பி.சுசிலா வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் பி.சுசீலா உதவி கேட்டுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டர் தளத்தில் ரசிகர்களுடனான கலந்துரையாடலில் ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, “தென்னிந்திய திரையுலகின் தலைசிறந்த பாடகியான பி.சுசீலாவிடம் பேசினேன். அப்போது எனது 99 சாங்க்ஸ் படத்தை ஓ.டி.டியில் பார்க்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர் படத்தை பார்த்து விட்டு என்னை அழைத்து படம் நன்றாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கை கதையையும் இதுபோலத்தான் படமாக்க வேண்டும். அதற்கு நீங்கள் உதவ முடியுமா? என்று கேட்டார். ஏழு தலைமுறையாக பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடிய பி.சுசீலா எனக்கு பிடித்த பாடகி. அவர் எனது படத்தை பாராட்டியது மகிழ்ச்சி'' என்றார். பி.சுசிலா வாழ்க்கை கதை படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்