கணவருக்கு ஆதரவாக செயல்படும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நடிகை ராதா புகார்

தனக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் இணை கமிஷனரிடம் நடிகை ராதா புகார் அளித்தார்.

Update: 2021-07-03 00:53 GMT
நடிகை ராதா புகார்
‘சுந்தரா டிராவல்ஸ்’ உள்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை ராதா (வயது 38), சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். இவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர், தன்னை அடித்து துன்புறுத்துவதாக விருகம்பாக்கம் போலீசில் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு புகார் அளித்தார். பின்னர் இருவரும் சமரசமாக 
செல்லவதாக கூறி புகாரை வாபஸ் பெற்றதாக தெரிகிறது. இந்தநிலையில் நடிகை ராதா, பரங்கிமலையில் உள்ள இணை கமிஷனர் நரேந்திரன் நாயரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். 

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

சேர்ந்து வாழ வற்புறுத்தல்
கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி எனது கணவரும், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டருமான வசந்தராஜா மீது விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தேன். அந்த புகார் மீது விசாரிக்க வேண்டும் என என்னை செல்போனில் அழைத்து பேசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, போலீஸ் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். என்னுடன் காரில் வா என்று கூறி அழைத்து சென்றார். பின்னர் அங்கு எனது கணவரையும் அழைத்து வந்து இருவரும் சமாதானமாக செல்லும்படி கூறியதுடன், புகாரை திரும்ப பெற்று நல்லபடியாக சேர்ந்து வாழுங்கள் என்று சப்-இன்ஸ்பெக்டர் பாரதி வற்புறுத்தினார். அப்படி இல்லை என்றால் வசந்தராஜா மீது எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என எழுதி கொடுக்கும்படி சொன்னார். எனது கணவரும் நல்லபடியாக சேர்ந்து வாழ்வதாக மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார்.

கொலை மிரட்டல்
இந்த நிலையில் வசந்தராஜா தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, இளம்பருதி ஆகியோர் எனது ஆட்கள்தான். நீ என்ன புகார் கொடுத்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. போலீசில் எழுதி கொடுத்ததை எல்லாம் அழித்துவிட்டேன் என கூறினார். இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக கேட்டபோது வசந்தராஜா எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதம் அதில் இல்லை. எனவே வசந்தராஜாவுக்கு ஆதரவாகவும், சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் இளம்பருதி, பாரதி மற்றும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்த வசந்தராஜா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்த துணை கமிஷனருக்கு உத்தரவிடலாம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்