எந்திரன் திரைப்பட கதை விவகாரம்: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு

எந்திரன் திரைப்பட கதை விவகாரம் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-08 11:32 GMT
கோப்புப்படம்
சென்னை, 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடித்து வெளியான படம், எந்திரன்.  ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்றும் காப்புரிமையை மீறி தன் அனுமதியை பெறாமல் கதையை திரைப்படமாக எடுத்திருப்பதாகக் கூறி, இயக்குனர் ஷங்கருக்கு எதிராக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து ஆரூர் தமிழ்நாடன் மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்திருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆரூர் தமிழ்நாடன் தரப்பில், எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்பதற்கான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, இது போன்று காப்புரிமை தொடர்பான வழக்குகளில் மேல் முறையீடு செய்ய சில வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. அத்தகைய வரம்புக்குள் இந்த மனு வராது என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்