‘பன்னீர் புஷ்பங்கள்’ வெளியாகி 40 வருடங்களை கடந்தது; பி.வாசு, சந்தானபாரதி நெகிழ்ச்சி

தமிழ் திரையுலக தயாரிப்புகளில், இளைஞர்களின் இதயங்களை தட்டிய ‘பன்னீர் புஷ்பங்கள்’ படம் வெளியாகி கடந்த ஜூலை 3-ந் தேதியுடன் 40 வருடங்கள் ஆனது.

Update: 2021-07-09 04:20 GMT
அந்த படத்தின் மூலம் ‘பாரதி வாசு’ என்ற பெயரில் இரட்டை டைரக்டர்களாக பி.வாசு, சந்தான பாரதி ஆகிய இருவரும் அறிமுகமானார்கள். இருவரும் மலரும் நினைவுகளை அசை போட்டார்கள்.‘‘நான் இயக்கிய படங்களில் மறக்க முடியாத படம், ‘பன்னீர் புஷ்பங்கள்.’ அது எனக்கும், சந்தானபாரதிக்கும் முதல் படம். கதாநாயகன் சுரேசுக்கு 15 வயது. கதாநாயகி சாந்தி கிருஷ்ணாவுக்கு 14 வயது. அதே வயதில் நிறைய பையன்கள் இருந்தார்கள்.காலை 6 மணிக்கு ஆரம்பித்து மாலை 5.30 மணி வரை படப்பிடிப்பு நடத்துவோம். அப்புறம் அடுத்த நாள் படப்பிடிப்புக்கு ஒத்திகை நடக்கும். ஊட்டியில் 19 நாட்களும், சென்னையில் 2 நாட்களும் ஆக மொத்தம் 21 நாட்களில் முழு படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டோம். 20 பிலிம் ரோல்கள் மட்டுமே பயன்படுத்தினோம். படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை பெரும் பலமாக இருந்தது’’ என்றார், பி.வாசு.

‘‘பன்னீர் புஷ்பங்கள் படத்தை இயக்கியது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்புக்காக ஊட்டிக்கு போய்வந்தது பிக்னிக் போய் வந்த மாதிரி இருந்தது. அந்த படம் வெற்றி பெற்றதால் நானும், வாசுவும் சேர்ந்து 5 படங்களை இயக்கினோம்’’ என்று கூறினார், சந்தான பாரதி.

மேலும் செய்திகள்