கார் நுழைவு வரி சர்ச்சை: விஜய்க்கு காயத்ரி ரகுராம் ஆதரவு

ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி தொடர்ந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்து ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

Update: 2021-07-15 02:42 GMT
நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி தொடர்ந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்து ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கியது.

இதையடுத்து சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் ஹேஷ்டேக் டிரெண்டாகி பரபரப்பானது. விஜய்க்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நடிகர் விஜய் எப்போதுமே பல ஏழை மக்களுக்கு நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகத்தான் இருக்கிறார். பிரதமர் மற்றும் முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கி இருக்கிறார். ஏராளமான மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி இருக்கிறார். அவரது ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவி இருக்கிறார். ஒருவரின் குணத்தை அவதூறு செய்ய கூடாது.

நீதிமன்றத்தில் நடந்த விஷயம் நீதிமன்றத்தோடு முடிந்துவிட்டது. விஜய் செய்த உதவிகளை நாம் மறக்க கூடாது. கோர்ட்டு விஷயத்தை வைத்து அவர் செய்த நல்லவைகளை அசிங்கப்படுத்த கூடாது. காருக்கு நுழைவு வரியில் இருந்துதான் விலக்கு கேட்டார். நீதிமன்றம் அனுமதிக்காவிட்டால் வரியை கட்டப்போகிறார். அவ்வளவுதான்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்