துபாயை 2-வது தாயகமாக உணர்கிறேன் - நடிகர் விஜய் சேதுபதி பேச்சு

துபாயில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சினிமாத்துறையில் செல்வாக்கு மிகுந்த நட்சத்திர விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Update: 2021-12-13 04:40 GMT
துபாய், 

துபாயில் தனியார் நட்சத்திர ஓட்டலில் சர்வதேச புரோமோட்டர்ஸ் சங்கத்தின் சார்பில் அமீரகத்தின் 50-வது பொன்விழா மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அஜ்மான் ஆட்சியாளர் அலுவலகத்தின் தலைவர் டாக்டர் மாஜித் பின் சயீத் அல் நுயைமி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமீரகத்தில் வசிக்கும் ஆசிய நாடுகளை சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தொழில் அதிபர்கள், நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி விருதுகளை வழங்கினார். அதன் பிறகு அவர் நடித்து பிரபலமான ‘டசக்கு டசக்கு’ என்ற பாடலுக்கு நடனக்குழுவினர் நடனம் ஆடினர். 

இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதிக்கு சினிமாத்துறையில் செல்வாக்கு மிகுந்த நட்சத்திர விருதினை அஜ்மான் ஆட்சியாளர் அலுவலகத்தின் தலைவர் டாக்டர் மாஜித் பின் சயீத் அல் நுயைமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதையடுத்து விஜய் சேதுபதி பேசும்போது கூறியதாவது:-

“நான் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். மிகப்பெரிய லட்சியங்களுடன் நான் கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய்க்கு வந்தேன். இங்குள்ள பர்துபாய், அல் பஹிதி சாலைகளில் எனது கனவுகளுடன் நடந்து சென்றுள்ளேன். எனது அறைக்கு எதிரில்தான் மலபார் நிறுவனத்தின் கடை இருந்தது.

இங்கு வந்தபிறகு இது ஒரு புதிய நாடு, வெளிநாடு என்ற உணர்வு இல்லாமல் எனது 2-வது தாயகமாக துபாயை உணர தொடங்கினேன். அதன் பிறகு 3 ஆண்டுகள் துபாயில் பணியாற்றிய பிறகு சென்னைக்கு சென்றேன். தொடர்ந்து திருமணம் செய்தேன். பின்னர் சினிமாவில் நடித்து இந்த நிலைக்கு நான் வந்தது ஒரு விபத்தாகும்.

சென்னையில் குடியேறிய பிறகு பலமுறை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்காக துபாய்க்கு வருகை புரிந்துள்ளேன். இன்றும் நான் வசித்த பகுதியை மறக்காமல் சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். துபாய் நகரம் தொடர்ந்து வளர்ச்சியை அடைந்து வருகிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்