4 வருட இடைவெளிக்கு பிறகும் எனது படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம்- கமல்ஹாசன்

"வடக்கிலும், தெற்கிலும் உள்ள அபராத் திறமைகளை நான் அறிவேன். அவற்றை பிரித்துப் பார்க்க கூடாது" என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2022-05-23 10:50 GMT

கமல்ஹாசன் நடித்து கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு அளித்த பேட்டியில் சினிமா பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். அவர் கூறும்போது, ''நான் சுமார் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து இருக்கிறேன். இவ்வளவு இடைவெளிக்கு பிறகும் என் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பார்வையாளர்களுக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன். வடக்கு, தெற்கு என்று சினிமாவை பிரித்துப் பேசுவது பற்றி கேட்கின்றனர். என்னை எப்போதும் ஒரு இந்தியனாகவே பார்க்கிறேன். இந்தியாவில் எந்த பகுதியிலும் என்னால் வசதியாக இருக்க முடியும். இதுதான் பன்முக தன்மை கொண்ட இந்தியாவின் அழகு. வடக்கிலும் தெற்கிலும் இருக்கும் திறமைகளை அறிவேன். அதை பிரித்து பார்க்க கூடாது. இந்தியா முழுவதும் உள்ள படங்களை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல முடியும். இந்திய படங்கள் சர்வதேச படங்களாக மாற நீண்ட காலம் ஆகிவிட்டது. சினிமாவை உலக அளவுக்கு கொண்டு செல்வதை திரையுலகினர் பார்த்துக்கொள்வார்கள். அரசு சினிமாவில் தலையிட வேண்டாம்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்